Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் 16 கண் மதகு வழியாக 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம்: நடப்பாண்டில் மேட்டூர் அணை 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தம் 25,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 16 கண் மதகு வழியாக 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடிநீர் வெயேற்றப்படுகிறது.
4வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிகை விடுத்து வருகின்றனர்.
உபரி நீர் 25,000 கன அடியாக திறப்பு
மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது.நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 18,000 கனஅடியில் இருந்து மாலை 6 மணி அளவில் 25,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.
3-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து 3 தினங்களாக அதே அளவு நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





















