நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
AIADMK - NEET: நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் உள்ளது என திமுக அரசு பொய் கூறி ஆட்சிபிடித்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களின் தலைநகரங்களிலும் அதிமுகவின் மாணவரணியினர், திமுகவு எதிராக கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினர். வாக்குக்காக நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக கட்சியானது, நீட்டை வைத்து பிரதானமாக பரப்புரையை மேற்கொண்டது. நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது. மேலும், நீட்தேர்வானது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என்றும், அதை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கிறது எனவும், தற்போதைய துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், பரப்புரையின்போது தெரிவித்தார்.
ஆனால், திமுகஆட்சிக்கு வந்து, 4 வருடங்களாகிறது. அடுத்த வருடம் தேர்தலே வரப்போகிறது. ஆனால், திமுக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனால், ரத்து செய்யும் அதிகாரம் கொண்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால், ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை , எதன் அடிப்படையில் கொடுத்தது, வாக்குகளுக்காகவா என்று அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அதன் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்திஏந்தி அஞ்சலி செலுத்தி, திமுகவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், கொலை செய்து கொள்ளை அடித்தல், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்து அரசு கட்டணங்களும் பல மடங்கு உயர்வு என மக்களுக்கு எதிரான விரோதப் போக்குடன் திமுக செயல்பட்டு வருகின்றது என திமுகவை குற்றம் சாட்டி அதிமுகவினர் கோசங்களை எழுப்பினர்.
Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா

