(Source: ECI/ABP News/ABP Majha)
சீர்காழியில் வர்த்தகர் திடீர் கடையடைப்பு போராட்டம் - காரணம் இதுதான்
சீர்காழி நகரில் மருந்தகம், உணவகங்கள் தவிர 2500 -க்கும் மேற்பட்ட மற்ற கடைகள் மூடப்பட்டது.
சீர்காழியில் வர்த்தகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வணிகர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வணிகர், வழக்கறிஞர் பிரச்சினை
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் 49 வயதான சுந்தர். இவர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காலனி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் கடைக்கு சீர்காழி அருகே மேல நாங்கூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த 32 வயதான வழக்கறிஞர் இளையராஜா என்பவர் வந்துள்ளார். அப்போது இளையராஜா சுந்தரிடம் உங்க கடையில் மூன்று நாட்களுக்கு முன்பு காலனி வாங்கி சென்றதாகவும். அந்த காலணி நேற்று சிறிது கிழிந்துள்ளது அதனை மாற்றி தர வேண்டும் என இளைராஜா கேட்டுள்ளார்.
இருதரப்பு மீது வழக்கு பதிவு
அதற்கு சுந்தர் மூன்று நாட்கள் ஆகி விட்டது. ஆதலால் அதனை மாற்றி தர இயலாது எனவும், வேண்டுமானால் அதனை தைத்து தருவதாக கூறியுள்ளார். இதன் இடையே காலனியை மாற்றுவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இளையராஜா தன்னை சுந்தர் தாக்கியதாக கூறி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் இளையராஜா சீர்காழி காவல் நிலையத்தில் வர்த்தகர் சுந்தர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழும், கடை உரிமையாளர் அளித்த புகாரில் இளையராஜா மீது 4 பிரிவுகளின் கீழும் என இரு வேறு வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கடையடைப்பு போராட்டம்
இந்த சூழலில் வர்த்தகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், உரிய விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினரை கண்டித்தும், சீர்காழியில் வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சீர்காழி நகரில் மருந்தகம், உணவகங்கள் தவிர 2500 -க்கும் மேற்பட்ட மற்ற கடைகள் மூடப்பட்டது. வர்த்தகர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் வாபஸ்
சீர்காழியில் வர்த்தகர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து வணிகர்கள் போராட்டத்தை கைவிட்டு பிற்பகலுக்கு பிறகு கடைகளை திறந்தனர்.