கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 2026 மார்ச் 6-ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்த விபரங்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தெரிவித்துள்ளார்.

காரைக்கால்: உலகப்புகழ் பெற்ற காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில், வரும் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழா குறித்து இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பிரம்மாண்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சனிப்பெயர்ச்சி நேரமும் ஆன்மீக முக்கியத்துவமும்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சியர், "வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி, விசுவாவசு வருடம், மாசி மாதம் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), அதாவது மார்ச் 06, 2026 அன்று காலை 8 மணி 24 நிமிடத்திற்கு, ஸ்ரீ சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த நன்னாளில் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெறும் எனவும் மேலும் விழாவிற்கான ஏற்படும் விவரம் குறித்தும் அவர் தெரிவித்தார்.
தரிசன வரிசைகள் மற்றும் டிக்கெட் விபரங்கள்
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நெரிசலைத் தவிர்க்க நான்கு விதமான தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* இலவச தரிசன வரிசை
* ரூ. 300/- சிறப்பு தரிசன வரிசை
* ரூ. 600/- சிறப்பு தரிசன வரிசை
* ரூ. 1000/- சிறப்பு தரிசன வரிசை
"டிக்கெட் மோசடிகளைத் தவிர்க்க, தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ ஹாலோகிராம் ஒட்டப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக நகரின் முக்கிய 15 இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன," என்று ஆட்சியர் எச்சரித்தார்.
வெப்பத்தைத் தணிக்க சிறப்பு ஏற்பாடுகள்
மார்ச் மாத வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் நிற்கும் வரிசை முழுவதும் தகரக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் வரிசையில் நிற்பவர்களுக்கு ஏதுவாக ஆங்காங்கே அமர்ந்து செல்லும் வசதிகளும், முக்கிய இடங்களில் தற்காலிக குளிர்சாதன (Air Conditioning) வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர், பிஸ்கட் வழங்கவும், பாலூட்டும் தாய்மார்களுக்கு எனப் பிரத்யேகத் தனி அறைகள் (Feeding Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நளன் குளம் மற்றும் சுகாதார வசதிகள்
பக்தர்கள் புனித நீராடும் நளன் குளம் முழுமையாகத் தூர்வாரப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. "சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குளத்தின் புனிதத்தைப் பேணவும் பக்தர்கள் சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், பெண்களுக்கு என அதிக எண்ணிக்கையிலான உடை மாற்றும் அறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்
அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, அந்தந்த மாநிலப் போக்குவரத்துத் துறைகளுடன் இணைந்து கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நெரிசலைக் குறைக்க ஊரின் வெளிப்பகுதிகளில் பிரம்மாண்ட வாகன நிறுத்தங்கள் (Parking Slots) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அன்னதானம் மற்றும் அடிப்படை வசதிகள்
பக்தர்கள் பசியின்றி தரிசனம் செய்ய, வரிசைகள் தொடங்கும் இடம் மற்றும் வெளியேறும் வழித்தடங்கள் எனப் பல இடங்களில் இலவச அன்னதான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவில் தற்காலிகக் கழிவறைகள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவசர கால உதவி எண்கள்
பக்தர்களுக்கு வழிகாட்டவும், அவசர கால உதவிகளுக்காகவும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
* இலவச எண்கள்: 1070, 1077
* அவசர உதவி எண்: 8300261071
முடிவாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் அனைத்து பக்தர்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து சனீஸ்வர பகவானின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," எனத் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்























