(Source: ECI/ABP News/ABP Majha)
DMK Functionary Arrested : “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’ விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!
"பெண் கிராம நிர்வாக அலுவலரை திமுக நிர்வாகி வயிற்றில் எட்டி உதைத்ததாக வி.ஏ.ஓ அளித்த புகாரில் நடவடிக்கை”
விழுப்புரத்தில் திமுக மாவட்ட கவுன்சிலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கவுன்சிலர கைது ஏன் ?
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கியுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த உணவை சாந்தி எடுத்து கொடுத்து விட்டதாக கூறி, திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த அதிகாரிகளும் தடுத்துள்ளனர்.
”மதுபோதையில் வந்த ராஜீவ்காந்தி - பெண் VAO- வை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்”
பிறகு அங்கிருந்து சென்ற ராஜீவ்காந்தி வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு மதுபோதையில் இரவு பத்து மணிக்கு மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து, கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை தலையை முடியை பிடித்து இழுத்து சென்று வயிற்றிலேயே எட்டி உதைத்ததாகவும் அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், வலியால் துடித்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தி சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கானை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், அந்த கிராம மக்களும் தனியாக ஒரு புகார் மனு எழுதி காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.
தலைமறைவான திமுக கவுன்சிலர்
காவல்துறை வழக்கு பதிவு செய்தது தெரிந்ததும் திமுக மாவட்ட கவுன்சிலர் தலைமறைவானார். காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ராஜீவ் காந்தியை தேடி வந்தனர் இந்நிலையில் இன்று காலை ராஜீவ்காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் தெரிய வந்த உண்மை
காவல்துறையின் விசாரணையில் வாக்குப்பதிவு அன்று மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தியும், கிராம நிர்வாக அலுவலர் சாந்தியும் ஒரே உணவகத்தில் உணவு வாங்கியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தான் வாங்கிவந்த உணவை அதிகாரிகளுக்கு கொடுத்தபோது அதனை தவறுதலாக புரிந்துக் கொண்ட மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி தான் வாங்கிவந்த உணவை எடுத்து கொடுத்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை தாக்கியுள்ளார்.
தவறுதலான புகார் - மறுத்த வி.ஏ.ஓ
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறி பாமக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் அளித்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மறுநாள் செய்தித்தாள்களின் செய்தி வெளியான நிலையில் பாமகவினர் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை விசாரித்துள்ளனர்.
அப்பொழுது இந்த புகாரை நான் அளிக்கவில்லை என கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கூறியுள்ளார். தொடர்ந்து பாமகவினர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வழக்கு பதிவு குறித்து கேட்டுள்ளனர். அப்பொழுது காவல்துறையினர் புகார் ஒன்றை தயார் செய்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் கையெழுத்து பெற்று வருமாறு திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி இடம் கொடுத்துள்ளனர் அதில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கையெழுத்திட மறுத்துள்ளார். இந்த முன் விரோதம் காரணமாகவே கிராம நிர்வாக அலுவலர் சாந்தி மீது திமுக கவுன்சிலர் ராஜீவ்காந்தி தாக்குதல் நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.