Sabarimala Temple: ஏப்ரல் 14ல் சித்திரை விஷூ தரிசனம்.. சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்
சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும்.
உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளத்தில் இருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும் மண்டல கால பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தின்போது லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் உத்சவ பலி, ஸ்ரீபூத பலி உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 10-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழாவும் நடைபெறும்.
சித்திரை விஷூ பூஜைகள் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. சித்திரை விஷூ தினத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை கணிகாணும் நிகழ்வு நடக்கிறது. 7 மணி முதல் அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் மாதாந்திர பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. வழக்கமாக சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு 2 யானைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு விழா, சாமி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும். இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானை நேற்று சபரிமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மற்றொரு யானையை பம்பையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தின் போது செண்டை உள்ளிட்ட மேளங்களை தவிர்த்து தவில் உள்ளிட்ட மேளங்கள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர்ச்சியாக 18 தினங்கள் சபரிமலை நடை திறந்திருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது. சபரிமலை தரிசனத்துக்கான புதிய நடைமுறை கடந்த மாத பூஜையின்போதே கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, பதினெட்டாம் படியில் ஏறியதும் மேம்பாலம் வழியாகச் சுற்றிச் செல்லாமல், கொடிமரத்திலிருந்து நேரடியாக ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கலாம்.

