IPL 2025 MI vs LSG: கடைசி வரை த்ரில்.. மும்பைக்கு ஷாக் தந்த லக்னோ.. பவுலிங்கில் கலக்கிய பண்ட் பசங்க!
IPL 2025 LSG vs MI: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையேயான 16வது போட்டி இன்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி மார்ஷ், மார்க்ரம், பதோனி, மில்லர் அதிரடியால் 203 ரன்களை எடுத்தது.
204 ரன்கள் டார்கெட்:
பின்னர், 204 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மா இல்லாததால் வில் ஜேக்ஸ் - ரிக்கெல்டன் ஆட்டத்தை தொடங்கினர். ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி தந்தனர். அதிரடி வீரர் வில் ஜேக்ஸை ஆகாஷ் தீப் 5 ரன்களில் காலி செய்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரிக்கெல்டன் 10 ரன்களில் அவுட்டானார்.
நமன்தீர் அதிரடி:
பின்னர், களமிறங்கிய நமன்தீர் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரியும்,சிக்ஸரும் விளாச, சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்தார் கேப்டன் பண்ட் அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது, அதிரடி காட்டிய நமன்தீரை இளம் வீரர் திக்வேஷ் அவுட்டாக்கினார். திக்வேஷ் சுழலில் நமன்தீர் போல்டானார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
பின்னர், சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா நிதானம் காட்ட சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். திக்வேஷ் ரதி சிக்கனமாக வீச பிஷ்னோய் சுழலில் அதிரடி காட்டினர். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டிலே மும்பை சென்றது.
அதிரடி காட்டிய சூர்யா அவுட்:
இதனால், கடைசி 30 பந்துகளில் 61 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. இடையில் கிடைத்த கடினமான கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்பை லக்னோ தவறவிட்டது. திலக் வர்மா அதிரடி காட்ட முடியாமல் தடுமாற மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அதிரடி காட்டினார்.
மும்பை வெற்றிக்கு 24 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆவேஷ்கான் பந்தில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். அவர் சிக்ஸர் அடிக்க முயற்சித்த பந்து அப்துல் சமத்திடம் கேட்ச் ஆனது. அவர் 43 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 67 ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து, களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். 18வது ஓவரை திக்வேஷ் ரதி சிக்கனமாக வீசினாலும் கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் 19வது ஓவரில் சிங்கிள்களாக எடுத்த நிலையில் திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் வெறும் 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் அவுட் ஆனார்.
திக்.. திக்.. வெற்றி:
கடைசி 6 பந்துகளில் 22 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய முதல் பந்திலே பாண்ட்யா ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால், கடைசி 5 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டாவது பந்தில் 2 ரன்களும், 3வது பந்தில் ரன் ஏதும் வராததால் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்திலும் ஹர்திக் பாண்ட்யா ரன் அடிக்காததால் கடைசி 2 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் 1 ரன் எடுத்த நிலையில், கடைசி பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தையும் ஆவேஷ்கான் டாட் பாலாக வீச, லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நமன்தீர், சூர்யகுமார் அதிரடி வீணானது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். திக்வேஷ் ரதி 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை தோல்விக்கு காரணமாக அமைந்தார்.



















