’’ராமநாதபுரம் மின்மிகை மாவட்டமாக திகழ்கிறது’’ - ஏடுகள் குழுவின் தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன்
''தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகும். இக்குழுவின் கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன''
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கடந்த ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தலில் உள்ள தாமதம் குறித்தும் அதற்கான விளக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுத்தலைவர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகும். இக்குழுவின் கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுவின் மூலம் ஆண்டு தோறும் ஒரு துறைக்கு, பொது நிறுவனங்கள், கழகத்திற்கு மற்றும் வாரியங்களுக்கு அரசு வழங்க கூடிய முதலீடுகளை முறையாக பெற்று, எந்த நோக்கத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தததோ அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனையும், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீடுகளுக்கான கணக்குகளையும், தணிக்கை கணக்குகளும் இக்குழு மூலமாக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு நாள் மின் தேவை மொத்தம் 118 மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 187.2 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக திகழ்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இம்மாவட்டத்தில் உள்ள அக்காள்மடம், நென்மேனி, கோவிலாங்குளம், கீழராமநதி, எம்.கரிசல்குளம், திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லானி ஆகிய இடங்களில் மொத்தம் 1,979 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே கடலாடி, ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தலா 33 மு.ஏ திறன் கொண்ட துணை மின் நிலையங்களை 110 மு.ஏ திறன் கொண்டதாக மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் நோக்கில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி-இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுத்திட உதவியது. இத்திட்டத்தை இன்றைய மக்கள் தொகைக்கேற்ப விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, நரிப்பையூர் மற்றும் குதிரைமொழி ஆகிய கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் தனிநபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் அளவிலும், ஊரக பகுதிகளில் தனிநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் அளவிலும் தண்ணீர் விநியோகம் உறுதி செய்திடும் வகையில் பணிகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுத்தலைவர், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பட்டணம்காத்தான் மற்றும் ஆர்.எஸ்.மடை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், வழுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.