Madurai ; உணவு தயாரிப்பு முதல் ரோபோடிக் தயாரிப்பு வரை.... மதுரை ஸ்டார்ட் அப் திருவிழாவின் முழு விபரம் !
மதுரையில் நடைபெற இருக்கிற இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவானது தென் தமிழகத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த தளமாக இருக்கும்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 மற்றும் 29ஆம் தேதி மாபெரும் தொழில் கனவு என்கிற தலைப்பில் ஸ்டார்ட் அப் திருவிழாவானது நடைபெற உள்ளது. அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் ஸ்டார்ட் அப் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான திருவிழா
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில்...,” ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான இந்த 2 நாள் திருவிழா தமுக்கம் மைதானத்தில் 28 மற்றும் 29ஆம் தேர்தலில் நடைபெறுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திருவிழாவானது ஆண்டு தோரும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கோவையிலும் தற்போது மதுரையில் நடைபெற உள்ளது. மேலும் தொழில் முனைவோர்கள் புதிதாக தொழிலை மேம்படுத்துவதற்கு உண்டான ஆலோசனைகள் இதில் வழங்கப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தில் புது தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும், தொழில் முனைவோர் ஆக இருப்பவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உணவு தயாரிப்பிலிருந்து, ரோபோடிக் தயாரிப்பு வரை அனைத்து விதமான தொழில் முனைவோர்களும் இதில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிறைவு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொழில் முனைவோர்களுக்கான ஆணைகளை வழங்க உள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களிடத்தில் தொழில் முனைவோர் குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என்றார்.
ஒரு தொழில் முனைவோரை உருவாக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று
இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாட் அப் தமிழ்நாடு தலைமை நிர்வாகி சிவராஜா ராமநாதன் பேசும்போது....”இரண்டு நாள் ஸ்டார்ட் அப் திருவிழாவில் இந்தியா முழுவதிலிருந்து 83 பேச்சாளர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதில் 50 தொழில் முதலீட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர். மாணவர்களுக்கு என்று தனியாக தீர்க்கத்தான் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஸ்டார்ட் அப் தமிழ் நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்வதும், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வரை இந்திய அளவில் கடைசி இடத்தில் இருந்தது. தற்போது கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில் பத்தாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. உலக அளவில் 25 வது இடத்தை பிடித்துள்ளது. மதுரையில் நடைபெற இருக்கிற இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவானது தென் தமிழகத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த தளமாக இருக்கும். தமிழ்நாட்டை உலகத்தில் மிகச்சிறந்த தொழில் முனைவு மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சி இது எனவும், இன்றைய காலகட்டத்தில் ஒரு தொழில் செய்வது என்பது ஒரு பாதுகாப்பற்ற நிலை என பயத்துடனே பார்க்கப்படுகிறது. இன்றைக்கு தொழில் முனைவோர் என்பது தேவையான ஒன்று, நல்ல வேலையை எப்படி தேடுகிறோமோ அதே போல நல்ல ஒரு தொழில் முனைவோரை உருவாக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று. அதற்கு உண்டான முயற்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார் என்றார்.