டாஸ்மாக் கடை தொடர்பான வழக்கு: சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடையை மாற்றி அமைப்பதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
விருதுநகர் மாவட்டம், தங்கதிருப்பதி நகர் பகுதியில் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடமான பிளாட் 98A-வில் டாஸ்மார்க் கடையை மாற்றி அமைக்க தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து கோரிய வழக்கில், டாஸ்மாக் கடையை மாற்றி அமைப்பதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பசுபதி முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம் தங்கதிருப்பதி நகர் பிளாட் எண் 108ல் 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த மதுபான கடையை அதே பகுதியிலுள்ள பிளாட் எண் 98Aல் மாற்றி அமைக்க விருதுநகர் வத்திராயிருப்பு தாசில்தார் அனுமதி வழங்கியுள்ளார்.
பிளாட் எண் 98Aவிற்கான கட்டிடம் குடியிருப்பிற்காக கட்டப்பட்டது. மேலும் இதன் அருகே பல்வேறு குடியிருப்புகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் குடியிருப்பிற்கான கட்டிடத்தில் டாஸ்மாக்கை மாற்றி அமைப்பதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டம், தங்க திருப்பதி நகர் பகுதியில் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடமான பிளாட் 98A-வில் மற்றும் குடியிருப்புகள் நடுவே டாஸ்மார்க் கடை அமைக்க தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அதிகாரிகள் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் பிளாட் எண் 98A என்பதற்கு பதிலாக பிளாட் எண் 99 என உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், அறிக்கையில் பிளாட் எண் 98A என்பதற்கு பதிலாக 99 என தட்டச்சு செய்யும் பொழுது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, தாசிந்தார் புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதனால் பழைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.
டாஸ்மாக் கடையை மாற்றி அமைப்பதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.
மற்றொரு வழக்கு
2016 ஆம் ஆண்டு திரைப்பட போஸ்டர் ஒட்டுக்கொண்டிருந்த நபர்களிடம் தலைமை காவலர் லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பதியப்பட்ட பொய் வழக்கு விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு திரைப்பட போஸ்டர் ஒட்டுக்கொண்டிருந்த மூன்று நபர்களிடம் அப்போதைய தலைமை காவலர் திரவிய ரத்தினராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மூவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதோடு அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக கவாஸ்கர் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தலைமை காவலர் திரவிய ரத்தினராஜ் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "காவல் துறையினர் லஞ்சம் கேட்டதால் எழுந்த விவகாரத்தில் காவல்துறையினர் மூவரையும் கடுமையாக தாக்கினர் இதில் ஒருவரது வலது கை உடைக்கப்பட்டுள்ளது; இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அறிக்கைகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தின் உண்மை நிலையை கண்டறிந்து அதனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே இதில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. காவல்துறையினரே மூன்று நபர்கள் மீதும் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்." எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.