Minister Nirmala Sitharaman: அவர் ஆட்சியில் 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு வீசப்பட்டன.. நிர்மலா சீதாராமன் ஒபாமாவுக்கு கண்டனம்..
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின் போது 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு வீசி தாக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு, மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடியின் பதில்:
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் வெள்ளை மாளிகையில் வரவேற்று சிறப்பு விருந்து அளித்தனர். அதற்கு முன் பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றினார்.
இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி கூட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது பிரதமர் மோடியிடம், தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மோடி, ” இந்தியா ஜனநாயகமானது என்று மக்கள் சொல்வதாக சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் வேண்டாம் என்று சொன்னாலும் இந்தியா ஜனநாயக நாடுதான். அதிபர் பைடன் கூறியது போல், ஜனநாயகம் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் டிஎன்ஏவில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றியே வாழ்கிறோம் . அதை நம் முன்னோர்கள் வார்த்தைகளாகச் சொல்லியிருக்கிறார்கள். நமது அரசியல் சாசனமும், நமது அரசாங்கமும், ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்தியாவில் சாதி, மத பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என தெரிவித்தார்.
ஒபாமா சொன்னது என்ன?
பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தொலைக்காட்சி ஒன்றூக்கு பேட்டியளித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியுடன் பேசுவதாக இருந்தால், ”இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருந்திருக்கும். அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகப் பேசுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என்று ஒபாமா பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் கண்டனம்:
#WATCH | FM Nirmala Sitharaman says, "...It was surprising that when PM was visiting the US, a former US President (Barack Obama) was making a statement on Indian Muslims...I am speaking with caution, we want a good friendship with the US. But comments come from there on India's… pic.twitter.com/6uyC3cikBi
— ANI (@ANI) June 25, 2023
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதற்கு மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் (பராக் ஒபாமா) இந்திய முஸ்லிம்கள் குறித்து கருத்து வெளியிட்டது ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை விரும்புகிறோம். ஆனால் இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து அங்கிருந்து கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒபாமா ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் 6 நாடுகள் மீது குண்டுவீசி தாக்கப்பட்டன. சுமார் 26,000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன” என தெரிவித்துள்ளார்.