”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்
வயசான ஆள இப்படி தள்ளி விட்டீங்களே என பாஜக எம்.பிக்கள் ராகுல்காந்தியை ரவுண்டுகட்டியதும் அவரு தான் என்னைய தள்ளிவிட்டாரு என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த தள்ளுமுள்ளுவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மோதலில் எம்.பி ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அவர் வந்து விழுந்ததில் தானும் கீழே விழுந்து மண்டை உடைந்ததாகவும் எம்.பி பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார். உடனடியாக அவரை சூழ்ந்த பாஜக எம்.பிக்கள் முதலுதவி கொடுக்க ஆரம்பித்தனர்.
அப்போது அவரை பார்ப்பதற்காக அங்கு வந்த ராகுல்காந்தி என்ன ஆனது என கேட்டார். அதற்கு பாஜக எம்.பி ரிஷிகாந்த் துபே, ராகுல்காந்தி உங்களுக்கு வெட்கமே இல்லையா, குண்டர்கள் போல் நடந்து கொள்கிறீர்கள். வயதான நபரை இப்படி தள்ளி விட்டிருக்கிறீர்கள் என ஆக்ரோஷமாக சொன்னார். உடனடியாக ராகுல்காந்தி அவர் தான் என்னை தள்ளிவிட்டார் என்று பதிலடி கொடுத்தார். அங்கிருந்த பெண் தலைவர் ஒருவர் அவர் உங்களை தள்ளிவிடவில்லை. அவருக்கு 70 வயதாகிறது உங்களை தள்ளிவிடவில்லை என கோபமாக பேசினார். பேசவிடாமல் கத்திக் கொண்டே இருந்ததால் நான் தள்ளிவிடவில்லை என சொல்லிவிட்டு ராகுல்காந்தி மற்றவர்கள் பேசுவதை கேட்காமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்த ராகுல், ‘‘இது எல்லாம் உங்கள் கேமராவிலேயே இருக்கும். நான் நாடாளுமன்றத்தில் செல்ல முயன்றேன். அப்போது பாஜக எம்.பிக்கள் என்னை தடுத்து தள்ளிவிட்டனர். அவர்கள் என்னை மிரட்டினார்கள். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. மல்லிகார்ஜூன கார்கேவையும் பிடித்து தள்ளிவிட்டார்கள். ஆனால் இந்த தள்ளுமுள்ளுவில் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நுழைவுவாயில் வழியாக உள்ளே போகும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் பாஜக எம்.பிக்கள் தடுத்தனர்” என தெரிவித்தார்.
இரண்டு தரப்பிலும் தள்ளுமுள்ளு இருந்ததாகவும், ஆனால் பாஜகவினர் மட்டும் ராகுல்காந்தி தள்ளிவிட்டதால் காயமடைந்ததாக சொல்லி நாடகமாடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.