Telangana: குரங்கு கொடுத்த பிஸினஸ்! கரடி வேஷத்துக்கு ரூ.500 சம்பளம்! தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம்!
"இந்த உடையை வாங்குவதற்கு 10,000 ரூபாயும், அதனை அணிந்து வயலில் நடந்து செல்வதற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயும் கொடுத்து நியமித்துள்ளேன். ஆனால் பயிர்கள் வீணாக போவதை விட இந்த செலவு பெரிதல்ல."
நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமல் இருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள் அமர்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும். அவற்றை நம்மூரில் சோளக்காட்டுபொம்மை என்று கூறுவோம். ஆனால் "மனுஷனுக்கு எந்த குரங்கு சார் பயப்புடுது?" என்கிறார்கள் தெலங்கானா விவசாயிகள். தெலங்கானாவில் குரங்குகள் பயிரை நாசம் செய்வதை தவிர்க்க விலங்குகளை கொண்டு வந்து நிறுத்தும் ஐடியா வெற்றி பெற்று பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள சிர்சில்லாவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி என்ற விவசாயி, தனது நான்கு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு, வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், அவரது நெல் அறுவடைக்கு தயாராகும் போது, குரங்குகள் கூட்டம் அவரது வயலைத் தாக்கி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் ஒரு வித்தியாசமான முறையில் இறங்கி பயிர்களை காக்க முடிவு செய்தார்.
ஜெய்பால் ரூ. 14,000 செலவழித்து உயிர்வாழும் அளவில் உள்ள ஒரு புலி போன்ற பொம்மையை வாங்கி தனது விவசாய நிலத்தின் நடுவில் வைத்தார். அப்படி வைத்தபிறகு குரங்குகள் உண்மையான புலி என்று நினைத்து அந்த பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டுள்ளன. தற்போது அவரது வித்யாசமான ஐடியா மூலம், குரங்குகள் அவரது பயிர்களை தாக்குவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டது. "அவை எல்லோரும் நினைப்பது போல சாதாரண குரங்குகள் இல்லை, மிகவும் ஆபத்தானவை, மனிதர்களை கண்டு அவற்றுக்கு பயம் இல்லை. அதனால் தான் புலியை வைத்து பயமுறுத்த முயற்சி செய்தேன். அது உண்மையிலேயே ஒரு புலி போன்ற உருவமும் அளவும் கொண்டது. நான் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக விவசாய தொழிலாளர்களிடம் சொன்னபோது மின்சார வேலி வைக்க சொன்னார்கள். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவி குரங்குகளை கொள்வது தவறு என்று நானே இப்படி ஒரு வழியை சிந்தித்தேன்", என்று கூறினார்.
அதே போல, சித்தி பேட்டா மாவட்டம் நாக சமுத்திரத்தை சேர்ந்த பென்சில் ஐயா என்பவர், 10 ஏக்கர் விளை நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குரங்குகள் அவ்வபோது பயிர்களை சேதப்படுத்துவதால் இவர் ஜெயபாலின் ஐடியாவை இன்னும் ஒருபடி மேலே கொண்டுபோய், தினமும் கரடி போல் வேடமணிந்துக்கொண்டு தனது விளை நிலத்தை பாதுகாத்து வருகிறார். ஹைதராபாத்திற்கு சென்று ஒரு பெரிய வடிவ கரடி உடையை வாங்கி வந்துள்ளார். "அந்த உடையை வாங்குவதற்கு 10,000 ரூபாய் ஆனது. அதனை அணிந்துகொண்டு வயலில் நடந்து செல்வதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கொடுத்து நியமித்துள்ளேன். ஆனால் பயிர்கள் வீணாக போவதை விட இந்த செலவு பெரிதல்ல. இதன்மூலம் என் நிலம் மட்டுமல்ல, பக்கத்து நிலமும் கூட பாதுகாக்கப் படுகிறது" என்று கூறுகிறார். இப்போது கரடி வேஷம் போட சம்பளத்துக்கு ஆள் தேடி வருகிறார்களாம் அந்த ஊர் விவசாயிகள்.
இந்த இருவரை குறித்தும் அவரவர் கிராமங்களில் பொதுமக்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பலரும் இந்த ஐடியாவை பின்தொடர்வார்கள் என்று தெரிகிறது.