Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் நினைவுச் சின்னங்கள் - மீண்டும் டெல்லி வருகிறது..!
Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் நினைவுச் சின்னங்கள் இன்று மீண்டும் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் நினைவுச் சின்னங்களை, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்தியா திரும்பும் புத்தர் நினைவுச்சின்னங்கள்:
புத்தர் மற்றும் அவரது இரண்டு முக்கிய சீடர்களான அரஹந்த் சாரிபுத்தர் மற்றும் மஹா மொகல்லானா ஆகியோரின் புனித நினைவுச்சின்னங்கள், இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு ஒரு மாத காலம் புனித பயணமாக கொண்டு செல்லப்பட்டன. நான்கு நகரங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோரால் பிரார்த்திக்கப்பட்ட அந்த நினைவுச்சின்னங்கள், இன்று மீண்டும் இந்தியாவிற்கு வர உள்ளன. அவற்றை முழு அரசு மரியாதையுடன் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் கண்காட்சி - உற்சாக கொண்டாட்டம்:
தாய்லாந்தில் நடந்த இந்த நினைவுச் சின்னங்களுக்கான கண்காட்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தாய்லாந்தின் ஒவ்வொரு நகரத்திற்கும் இந்த நினைவுச்சின்னங்கள் அடுத்தடுத்து கொண்டு செல்லும்போது, மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே காணிக்கைகளுடன் பக்தர்கள் வளைந்து நெளிந்து நீண்ட வரிசையில் பிராத்தை செய்தனர்.
Relics of Buddha and his disciples, Arahant Sariputta and Maha Moggallana, return to Delhi later today after a month-long exposition from Thailand. Four million devotees prayed to the relics in Thailand. pic.twitter.com/RrY83bMCvV
— Sidhant Sibal (@sidhant) March 19, 2024
சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் (IBC) இணைந்து இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுச்சின்னங்களின் கண்காட்சி, கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி பாங்காக், சியாங் மாய், உபோன் ரட்சதானி மற்றும் கிராபி மாகாணங்களில் நடைபெற்றது. பிரார்த்தனையின் தொடக்க விழா பாங்காக் நகரின் மத்திய கண்காட்சி பூங்காவில் நடந்தது. முழு ஆடம்பரத்துடன் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் பங்கேற்றார்.
'பகிரப்பட்ட பாரம்பரியம், பகிரப்பட்ட மதிப்புகள்' என்ற தலைப்பிலான இந்த கண்காட்சியானது, ஜூலை 28 அன்று வரும் மன்னரின் 72 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் நடத்தப்பட்டுள்ளது. பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மத்திய சமூக நீதி அமைச்சர் வீரேந்திர குமார் தலைமையிலான அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் அடங்கிய குழு, இந்த நினைவுச்சின்னங்கள் பிப்ரவரி 22 அன்று பாங்காக்கிற்கு கொண்டு சென்றன. பல்வேறு இந்திய பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களுடன், துறவிகளும் நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நடைபெற்ற பகுதிக்கு சென்றனர். அவர்கள் நினைவுச் சின்னங்கள் மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய பிரச்னைகள் குறித்து அங்கு உரையாற்றினர்.
அரசு மரியாதையுடன் வரவேற்பு:
தாய்லாந்தை பயணத்தை முடித்துக் கொண்டு புத்தர் நினைவுச் சின்னங்கள் இன்று மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட உள்ளன. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தஷி கியால்சன் தலைமையிலான குழு நினைவுச்சின்னங்களை கொண்டு வருகிறது. அந்த குழுவுடன் தேரவாத மற்றும் மகாயான பாரம்பரியத்தைச் சேர்ந்த ஏராளமான துறவிகளும் வருகின்றனர். இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்திற்கு வந்து சேரும் நினைவுச் சின்னங்களை, வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி பெற்றுக் கொள்கிறார்.