Corona Update | கொரோனா தடுப்பு தயார்நிலை குறித்து பிரதமர் இன்று முக்கிய ஆய்வு..
உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்திறனுடன் இருப்பதுடன், மக்களின் கவலைகள் மீது உணர்வுப்பூர்வமாக அக்கறை செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அன்றாட கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.
முன்னதாக, நேற்று வாரணாசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நிலவரம் குறித்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது மக்களுக்கு முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். வாரணாசி தொகுதியின் பிரதிநிதியாக, மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துக்களை பெற்றுவருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வாரணாசியில் கடந்த 5-6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ உட்கட்டமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவியுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 17-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சரவை செயலாளர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர்கள், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருந்தக செயலாளர் மற்றும் நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் வி.கே.பால் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்திறனுடனும், மக்களின் கவலைகளுக்கு உணர்வுப்பூர்வமாக அக்கறை செலுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
1 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் அவைகள் விரைவில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகம் பாதிப்புள்ள 12 மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆக்ஸிஜன் தேவைகளுக்கான மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் கூறினர். இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பான முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.