Coromandel Express Accident: இந்திய வரலாற்றின் மாபெரும் துயரம்...ஒடிசா ரயில் விபத்து பற்றி கமல்ஹாசன் வேதனை!
நாட்டையே உலுக்கியுள்ள இந்த ரயில் விபத்தில், இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா ரயில் விபத்து இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூன்.02) மாலை கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம் புரண்ட நிலையில், எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற மற்றொரு ரயிலும், தொடர்ந்து அதே பாதையில் சென்ற சரக்கு ரயிலும் தடம் புரண்ட பெட்டிகளுடன் அடுத்தடுத்து மோதின.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த ரயில் விபத்தில், இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஒடிசா விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
“ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் , தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்” என ட்வீட் செய்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2023
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச்…
விபத்து நடந்த பகுதியை முன்னதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு திருதை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விபத்து தொடர்பான உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்தும் உத்தரவிட்டார். மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னதாக விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் நிகழ்விடத்துக்கு சென்றடைந்தனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததாகவும், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் முன்னதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.