வீட்டுப்பாடம் இல்லை… வாரத்தில் ஒருநாள் பேக் வேண்டாம்… மாணவர்கள் சுமையை குறைக்கும் ம.பி. அரசு!
மாணவர்கள் இந்த துறை நிர்ணயித்தபடி எடையுள்ள பள்ளிப் பைகளை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்றும், மாணவர்களுக்கு எவ்வளவு வீட்டுப்பாடங்களை வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.
மத்தியப் பிரதேச அரசு 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் முறையை நீக்கியுள்ளது. மேலும் மாணவர்களின் பைகளின் எடையைக் குறைக்கும் வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
மாணவர் சிரமங்கள்
பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்படங்களை வீட்டில் சென்று செய்வது, படிப்பது என்பது சிறுவயதில் நாம் அனைவரும் அனுபவித்த ஒரு விஷயமாகும். சில நேரங்களில் அதனை எழுதாமல் பள்ளியில் சென்று வேறு வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் எழுதுவது, மாட்டிக்கொண்டு அடிவாங்குவது, எழுதாமல் சென்றுவிட்டு பல கதைகள் கூறுவது என நமக்கு பல நினைவுகளை தந்திருக்கும். ஆனால் மிக சிறிய வயது குழந்தைகள் பள்ளியிலும் படித்துவிட்டு, வீட்டிற்கு சென்றும் படிப்பது குறித்து பலா பெற்றோர்கள் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாமே சாலைகளில் பார்த்திருப்போம் பல குழந்தைகள் முதுகில் பாரமாக பெரிய பைகளை தூக்கி செல்வார்கள். இப்படி மாணவர்களை சிரமத்திற்கு உட்படுத்தும் விஷயங்கள் களைய மத்திய பிரதேசம் சில புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்
புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு, அரசு சாரா மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர்கள் இந்த துறை நிர்ணயித்தபடி எடையுள்ள பள்ளிப் பைகளை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்கவும் மாநில பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய கல்விக்கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பள்ளிப் பை கொள்கை 2020 ஆகியவற்றுக்கு இணங்கி இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் வீட்டுப்பாடம் எப்படி கொடுக்கவேண்டும், எவ்வளவு எடை பைகளை கொடுக்கவேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
என்னென்ன வழிகாட்டுதல்கள்
மத்தியப் பிரதேச பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்களின்படி, 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிப் பைகளின் எடை 1.6 முதல் 2.2 கிலோ வரை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு 1.7 முதல் 2.5 கிலோ வரையிலும், 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு 2 முதல் 3 கிலோ வரையிலும், 8ஆம் வகுப்புக்கு 2.5 முதல் 4 கிலோ வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 2.5 முதல் 4.5 கிலோவாகவும் உள்ளது. 2 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்தில் ஒரு நாள் பேக் இல்லாமல் பள்ளிக்கு வரவைக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர்களுக்கான வீட்டுப்பாடம் பற்றியும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தினமும் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் வீட்டுப்பாடம் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு, வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு மணிநேர வீட்டுப்பாடம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்