ரூ.50,000-க்கு இலவச ஸ்னாக்ஸ்.. பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடிய பானிபூரி வியாபாரி
எளிய மனிதர்களின் செயல் எப்போதுமே சபாஷ் சொல்ல வைத்துவிடுகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி, பெண் பிள்ளை பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ரூ.50,000 செலவு செய்துள்ளார்
எளிய மனிதர்களின் செயல் எப்போதுமே சபாஷ் சொல்ல வைத்துவிடுகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவர் தனக்கு பெண் பிள்ளை பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ரூ.50,000 செலவு செய்து விருந்து வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அன்சல் குப்தா. இவருக்கு வயது 28. சொந்தமாக பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருக்குக் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று பெண் குழந்தை பிறந்தது. அன்சல் குப்தா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். ஆனால், அவரின் உறவினர்களோ பெண் குழந்தையை வரவேற்கவில்லை. அப்போதுதான் அவர் உலகுக்கு பாடம் புகட்ட விரும்பினார். பாலின அடிப்படையில் பேதம் தவறென்பதை உணர்த்த விரும்பிய அந்த நபர் ரூ.50,000 செலவு செய்து நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் ட்ரீட் வைத்துள்ளார்.
இதற்காக கோலார் நகரில் மூன்று இடங்களில் பானிபூரி கடைகளை அவர் தற்காலிகமாக திறந்தார். இந்த மூன்று கடைகளிலும் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பானி பூரி வழங்கப்படும் என விளம்பரம் செய்தார். சுவையான இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியது. மூன்று கடைகளிலுமே கூட்டம் குவிந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் சளைக்காமல் பானிபூரி வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.50000 செலவாகியுள்ளது. அன்சல் குப்தாவுக்கு பானிபூரி வியாபரத்தில் இருந்து வருவது மட்டுமே வருமானம். ஆனாலும் தனது வருமானத்தைக் கொண்டு பாலின பேதத்தைப் போக்க மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்துள்ளார்.
இது குறித்து செய்தித்தாளுக்கு பேட்டியளித்த அன்சல் குப்தா, எனக்கு பெண் குழந்தை பிறந்தது என்றவுடனேயே, என் உறவினர்கள் பலரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். உனக்கு இனி சுமை ஏறிவிட்டது என்றனர். இந்த பெண் பிள்ளைக்காக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றனர். பலரும் பலவிதமாகப் பேசியது எனக்கு வருத்தமளித்தது. அதனாலேயே நான் இப்படியொரு முடிவை எடுத்தேன். இப்போது என்னைப் பலரும் பாராட்டுகின்றனர். பெண் பிள்ளைகள் உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள். பெண் பிள்ளைகளைக் கொண்டாடுங்கள் என்று கூறினார். இவரைப் போன்றோரைத்தான் பெண் பிள்ளைகளின் நலனுக்கான தூதுவராக ஐ.நா போன்ற பெரிய அமைப்புகள் அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்றுள்ளது. ... சராசரியாக 1000 ஆண்களுக்கு 943-980 பெண்கள் வரை இருக்க வேண்டும். ஆண் - பெண் பாலின விகிதம் வட இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை நிலவரப்படி குஜராத், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இந்த விகிதம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. இது ஆபத்தான போக்கு.
பெண்களை குழந்தைகளை பாதுகாப்போம். அவர்களின் கல்வியைக் கொண்டாடுவோம்..