Youtube : ”யூடியூபில் ஆபாச விளம்பரம் வந்ததால் ஃபெயில் ஆகிட்டேன்..” வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்
யூடியூபில் ஆபாச விளம்பரங்கள் வந்ததால் தன்னால் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என கூறி, இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆபாச விளம்பரங்களால் கவனத்தை இழந்தேன்:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் இணையதளத்தில் ஆபாச விளம்பர படங்கள் வந்ததால் , அதை கண்டு தனது கவனத்தை இழந்து மத்திய பிரதேச காவல்துறை தேர்வில் தன்னால் தேர்ச்சியடைய முடியவில்லை. அதனால் தனக்கு 75 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததோடு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான நியாயமான கட்டுப்பாடுகளை கோடிட்டுக் காட்டும் அரசியலமைப்பின் பிரிவு 19(2)ன் கீழ், சமூக வலைதளங்களில் ஆபாசத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
ஆவேசமடைந்து அபராதம் விதித்த நீதிபதிகள்:
இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அபய் எஸ்.ஓகா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுவினை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆர்ட்டிகிள் 32ன் கீழ் தொடரப்பட்ட வழக்குகளிலேயே மிகவும் மோசமான மனு இதுதான். உங்களுக்கு விளம்பரம் பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீர்கள். உங்களுக்கு எதற்காக இழப்பீடு தேவை? நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்காகவா, அல்லது நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் தேர்வில் தோல்வியடைந்ததற்கவா? என்று சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இணையத்தில் ஆபாச விளம்பரங்கள் வந்ததால் உங்களது கவனம் திசை திரும்பிவிட்டதாகக் கூறி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் நடத்தைக்காக நீங்கள் தான் நீதிமன்றத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என்று கூறினர். மேலும், இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் ஒன்றுக்கும் உதவாத வழக்குகள் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நீதி மன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.
மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பு:
நீதிபதிகளின் உத்தரவை கேட்டு அதிர்ச்சியடைந்த மனுதாரர் “நீதிபதி அவர்களே என்னை மன்னித்துவிடுங்கள். எனது பெற்றோர்கள் தினக்கூலிகள்.” என்று கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “உங்களுக்கு எப்போது விளம்பரம் தேவையோ அப்போதெல்லாம் இந்த நீதிமன்றத்திற்கு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அபராதத் தொகையை வேண்டுமென்றால் குறைக்கிறோம். மன்னிக்கவெல்லாம் முடியாது” என்று கூறி அபராதத்தொகையை 25 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர். அதையும் ஏற்க மறுத்த மனுதாரர் தனக்கு வருமானமே இல்லை என்றும் இந்த தொகையை கட்ட முடியாது என்று கூறி அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்கமறுத்த நீதிபதிகள், “உங்களுக்கு வருமான ஆதாரம் இல்லையென்றால், கடனை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு “அற்பமான பொதுநல வழக்குகள் காளான் வளர்வது போல வளர்கிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் மதிப்பான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதுபோன்ற வழக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.