உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
முதலமைச்சரின் சமீபத்திய வீடியோ ஒன்றை பகிர்ந்து, உங்கள் இளமைக்கால சினிமா கனவிற்கு பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே என கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும், பல்வேறு கேள்விகள் எழுப்பியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் என்ன இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து முதலமைச்சர் வீடியோ
தனது பிறந்தநாள் வேண்டுகோள் எனக் கூறி, வீடியோ ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், பொதுவாக தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், கட்சித் நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள் என்றும், திமுகவின் சாதனைகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த முறை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாக கூறிய அவர், தமிழ்நாடு தற்போது உயிர்ப் பிரச்னையாக மொழிப்போரையும், உரிமைப் பிரச்னையாக தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், இந்த முறை தனது பிறந்த நாளில், இந்த பிரச்னைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளார். தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரை விமர்சித்து அண்ணாமலை பதிவு
முதலமைச்சரின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, அவரை சரமாரியாக விமர்சித்துள்ளார். ”மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என, ஒருபுறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்” என கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மேலும், ”நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?” என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, ”மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல்… https://t.co/8isLMKgCuh
— K.Annamalai (@annamalai_k) February 28, 2025

