ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் - சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் திட்டத்தை அமல்படுத்தும் ஒரு கோடி குடும்பங்களுக்கு 75,000 கோடி ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
300 யூனிட் மின்சாரம் இலவசம்:
இந்த திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் அமைப்பை உருவாக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவையின் முடிவுகள் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 'பி.எம். சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோவாட் அமைப்புக்கு 30,000 ரூபாயும், 2 கிலோவாட் அமைப்புக்கு 60,000 ரூபாயும் மானியமாகப் பெறலாம்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
இதனால் மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க முடியும். உபரி மின்சாரத்தை டிஸ்காம்களுக்கு (மின்சார விநியோக நிறுவனம்) விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். 3 கிலோவாட் மின்சார அமைப்பின் மூலம் ஒரு குடும்பம், சராசரியாக ஒரு மாதத்திற்கு 300 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்றார்.
உரங்களுக்கான மானியம் அளிப்பது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "வரவிருக்கும் காரிஃப் பருவத்தில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு 24,420 கோடி மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு டை அமோனியம் பாஸ்பேட் உரம் குவிண்டாலுக்கு 1,350 ரூபாய்க்கு தொடர்ந்து வழங்கப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காரிஃப் பருவத்தில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் 24,420 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2024 காரிஃப் பருவத்தில் நைட்ரஜன் (N) மானியம் ஒரு கிலோவுக்கு 47.02 ரூபாயாகவும், பாஸ்பேடிக் (P) ஒரு கிராம் 28.72 ரூபாயாகவும், பொட்டாசிக் (K) 2.38 ரூபாயாகவும், சல்பர் (S) ஒரு கிலோவுக்கு 1.89 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "1.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத் மற்றும் அசாமில் மூன்று செமிகண்டக்டர் அலகுகளை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 100 நாட்களுக்குள் மூன்று அலகுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என்றார்.