சித்தேரி மலை கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு..
சித்தேரி மலை கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு.
தருமபுரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபானம் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பாட்டில்களை வாங்கி செல்பவர்கள், பாட்டில்களை திருப்பிக் கொடுத்தால், பத்து ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய், இருபது ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அரசு மதுபான கடைகளில் இன்று மாவட்ட மேலாளர் மகேஸ்வரி திடீரென ஆய்வு செய்தார். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபானம் கடைக்கு மாவட்டம் மேலாளர் மகேஸ்வரி, கலால் துறை ஆணையர், காவல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர். சித்தேரி மலை கிராமத்தில் அரசு மதுபான கடை இருப்பதால் மலை கிராம மக்கள் அறியாமையில் இருந்து வருகின்றனர் அதோடு மட்டுமல்லாமல் குளிர் பிரதேசம் என்பதால், தரைப்பகுதியில் இருந்து ஏராளமானார் மது அருந்துவதற்காக சித்தேரி மலைக்கு வருகின்றனர்.
இதனால் சித்தேரி மலை மீதுள்ள அரசு மதுபான கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்று வருகிறது இதனால் இங்கு முறையாக எல்லாம் பராமரிக்கப்படுகிறதா? கூடுதல் தொகை வசூல் செய்யப்படுகிறதா என்பதற்காக திடீரென ஆய்வு செய்தனர்.
அப்பொழுது கடைகளில் மதுபாட்டில் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? இருப்பு பதிவேட்டில் இருக்கின்ற அளவில் மது பாட்டில்கள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வு செய்தனர். மேலும் போலியான மது பாட்டில்கள் விற்பனை மலைப்பகுதியில் ஏதேனும் நடைபெறுகிறதா என்பது குறித்தும், மது பாட்டில்களை பெட்டியில் இருந்து எடுத்து பெட்டிகளை உடைத்து பார்க்கும் ஆய்வு செய்தனர்.
அரசு நிர்ணயித்த விலையை விட, மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுகிறதா என்பது குறித்து மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து மதுபான கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் கூடுதலாக பணம் வசூல் செய்யக்கூடாது, மது பாட்டில்களை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும், மொத்தமாக யாருக்கும் மது பாட்டில்களை வழங்கக் கூடாது, மொத்தமாக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
அரசு மதுபான கடைகளில் கூடுதல் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சித்தேரி மலை கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தியதால், சித்தேரி மலை கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.