உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
அதிமுக - பாஜக கூட்டணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக - பா.ஜ.க. கூட்டணி:
அந்த வகையில் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ள அதிமுக வரும் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற உடனே இந்த கூட்டணி உருவானது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மோதல் முதலே பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர். குறிப்பாக, எடப்பாடியுடனான மோதலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.
உள்ளே வரத்துடிக்கும் ஓ.பி.எஸ்.:
இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்காக உருவாகியுள்ள அதிமுக - பாஜக கூட்டணியில் தங்களை தவிர்க்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அதிமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.
சசிகலா மற்றும் தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்கு பிறகு நெருக்கம் காட்டி வருகிறார். சசிகலா மற்றும் தினகரன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வரும் நிலையில், அதிமுக-வையும் தங்கள் வசம் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்த வருகின்றனர். இந்த காரணங்களால் அதிமுகவில் மட்டுமின்றி அதிமுக-வின் கூட்டணியிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியை ஏற்றுக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
நாடாளுமன்ற தோல்வி:
எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட பிறகு தமிழ்நாட்டு அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் பெரியளவில் ஜொலிக்கவில்லை. இதனால், தமிழக அரசியலில் தனது தாக்கத்தை அவர் பெரியளவில் மீணடும் காட்ட வேண்டும் என்று முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக-வில் இணைவதற்காக அவர் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி தனது பலத்தை நிரூபிக்க முயற்சித்த ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராமநாதபுரம் தொகுதியில் தனித்து களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் 3வது இடமே பிடித்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளார்.
இன்று முடிவு:
இதனால், பாஜக கூட்டணியில் ஏற்கனவே உள்ள ஓ.பன்னீர்செல்வம் அதிமுக - பா.ஜ.க.வின் கூட்டணியிலும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விட்டு மாலையில் இறுதி முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியே ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொள்வது குறித்து முடிவு செய்வார் என்றே கூறப்படுகிறது.
மனம் மாறுவாரா இபிஎஸ்?
தென்மாவட்ட வாக்குகளை கருதி ஓ.பன்னீர்செல்வம் அணியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டாலும் எடப்பாடி பழனிசாமி அந்த அணியினருக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குவார்? என்ன சின்னம்? என்ற பல கேள்விகள் அடுத்தடுத்து எழும். அதேசமயம், சசிகலா, தினகரன் ஆகியோரின் குறுக்கீடுகள் இருக்குமா? என்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்த பிறகே இது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.





















