OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து கூறியது என்ன தெரியுமா.?

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா இல்லையா என்பது குறித்து இன்று அறிவிப்பதாக ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் என்ன கூறினார் தெரியுமா.? பார்க்கலாம் வாருங்கள்.
“இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்“
கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்ப்பு நிலவி சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், விரைவில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, தொண்டர்களிடமும் கருத்து கேட்ட பின்னர், 15 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்போம் எனக் கூறி ஏமாற்றமளித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, அது தற்காலிகமாகத்தான் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த தற்காலிக நிலைப்பாடே இன்றுவரை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை வந்த அமித் ஷா தங்களை அழைக்காதது வருத்தமளித்ததாகவும், கூட்டணி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதோடு, இதுவரை தேசிய ஜனநாயக கூட்டயில்தான் தொடர்கிறோம் என தெரிவித்த அவர், யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பது குறித்து தங்களுக்கு கவலை இல்லை எனவும் கூறினார்.
என்டிஏ கூட்டணிக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான தலைவராக இருப்பார் என பாஜக அறிவித்துள்ள நிலையில், அந்த நிலைப்பாட்டை ஏற்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார் ஓ. பன்னீர்செல்வம்.
2026 தேர்தலை குறி வைத்து பல்வேறு கட்சிகளும் கூட்டணிகளை இறுதி செய்துவரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில், இன்று அதற்கு ஒரு விடை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 15 நாட்களில் முடிவை அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அவர் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, இபிஎஸ்-ன் தலைமையை ஏற்க முடியாததாலேயே அவர் தனியாக சென்று, தொண்டர்கள் மீட்புக் குழு என தொடங்கி, சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு, ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்பாரா அல்லது புதிய கட்சி தொடங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















