Royal Enfield EV: ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
Royal Enfield Flying Flea Electric Bike: 2026-ம் ஆண்டில் சத்தமில்லாமல் ஒரு சம்பவத்தை செய்ய காத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ஆம், அதன் முதல் மின்சார பைக் அறிமுகமாகிறது.

இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் விவரங்களை காணலாம்.
ராயல் பிராண்டாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படுவது ராயல் என்ஃபீல்டு. இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில்தான் அதன் மொத்த பைக் உற்பத்தியையும், புதிய மாடல்களையும் உருவாக்கி வருகிறது.
மிகவும் ப்ரீமியம் பிராண்டாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள், பைக் பிரியர்களின் முதல் சாய்ஸ் என்றே கூறலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் சப்தத்திற்காகவே அதை வாங்குவோரும் உண்டு. சாலையில் போகும் போது, கம்பீரமாகவும், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு இருப்பதுதான் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்.
பல தலைமுறைகளை கண்ட இந்நிறுவனம், இக்கால இளைஞர்களை கவரும் வகையில் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனத்தில் காலடி எடுத்து வைக்காமல் இருந்த இந்நிறுவனம், தற்போது அந்த குறையையும் தீர்த்துவிட்டது. ஆம், 2026-ம் ஆண்டில், ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் வாகனம் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ஃபீல்டின் 'Flying Flea C6‘ மின்சார பைக்
ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்காக அறிமுகமாக உள்ளது, ‘ஃபிளையிங் ஃபிளே சி6‘. 2024 EICMA கண்காட்சியில் இந்த பைக் குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த கண்காட்சியில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை காட்சிக்கும் வைத்திருந்தது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த பைக் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக், சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டள்ளது. இந்த பைக்கில் என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளன என்பது குறித்து இன்னும் முழு தகவல் வெளியாகவில்லை. இந்த எலக்ட்ரிக் பைக்கை 2026-ம் ஆண்டு தொடக்கதிலேயே முழு அளவில் தயாரிக்கும் பணி தொடங்கும் என தெரிகிறது.
இந்த ஃபிளையிங் ஃபிளே எலக்ட்ரிக் பைக், 1940-களில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் வடிவத்தையும், அதே சமயம் மாடர்ன் லுக்கின் கலவையாகவும் உள்ளது. வித்தியாசமான முன்பக்க ஷாக் அப்சார்பர்கள், வாய்ஸ் கன்ட்ரோல், ப்ளூ ட்டூத் மூலம் செல்ஃபோனுடன் இணைப்பு அம்சங்களுடன் வட்ட வடிவ டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கைகள் என அம்சமான புதிய லுக்கில் இருக்கிறது இந்த ஃபிளையிங் ஃபிளே மின்சார பைக்.
சாவியில்லாமல், ஃபோன் மூலமாகவே பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதியை என்ஃபீல்டு நிறுவனம் ஆய்வு செய்து வரும் நிலையில், இந்த பைக்கில் அதை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் இந்த பைக் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.
சிட்டி பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கை, 100 கிலோ எடைக்குள் உருவாக்க என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எப்படியோ, என்ஃபீல்டு நிறுவனத்தில் எலக்ட்ரிக் பைக் இல்லையே என ஏங்கியிருந்த அதன் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.





















