கள்ளச்சாராய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் - தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை
கள்ளச்சாராய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் மாவட்ட ஆட்சியர் சாந்தி அதிரடி.
தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து அறுபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியை தமிழ்நாடு அரசு தீவிரபடுத்தி உள்ளது. இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாராய விற்பனை செய்தவர்களை பிடித்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளே நேரடியாக கள்ளச்சாராய ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மூலமாக விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ள சாராய ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக, துறை அலுவலர்களுடன் வாராந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுதாஸ் உள்ளிட்ட அலுவலர்களிடம், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டு அறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, தமிழக முதல்வர் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனுக்குடன் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், டிஎஸ்பி ஆகியோருக்கு கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்கள் கலாச்சாராயம் தொடர்பான புகாரை, 6369028922 என்ற whatsapp எண் மூலம் தெரிவிக்கலாம். அதேப்போல் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தடுக்கும் வகையில் மருந்துகள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில், மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதை பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், உதவி ஆணையாளர் நர்மதா, மாவட்ட மேலாளர் டாஸ்மாக் மகேஸ்வரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு சிவகுமார், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, தாசில்தார்கள் உட்பட காவல் துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.