Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada
ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ரேஸில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் முன்னணியில் இருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு லிபரல் கட்சி சார்பாக கனடா பிரதமராக பொறுப்பேற்றார் ஜஸ்டின் ட்ரூடோ. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதே பதவியில் இருந்தார். முதல் முறையாக அவர் பொறுப்பேற்ற போது உலகின் இளம் பிரதமராக அறியப்பட்டார். அப்போதில் இருந்தே ஜஸ்டின் ட்ரூடோ மீது உலகின் பார்வை விழுந்தது. தான் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தியாவுடனான நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
இந்தியா வந்த அவருக்கு பிரதமர் மோடி கொடுத்த உற்சாக வரவேற்பு, அவரது குழந்தைகளோடு மோடி கொஞ்சி விளையாடியதெல்லாம் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துவதாக இருப்பதாக கனடா நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. இப்படி ஒரு நாடுகளுக்கும் இருந்த நல்ல உறவு நாளடைவில் உடைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமைந்தது காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலைக்கு காரணம் இந்தியா தான் என்று ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்தது தான்.
இதன் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் அவரது சொந்த நாட்டிலேயே அவருக்கான எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது லிபரல் கட்சியனரே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தான் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேசிஸில் தற்போதைய கனடா துணை பிரதமராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், சர்வதேச விவகாரங்கள் அமைச்சர் டாமினிக் லீ பிளாங்க், கனடா மற்றும் இங்கிலாந்து வங்கிகளின் முன்னாள் கவர்னர் மார்க் கார்னே மற்றும் அனிதா ஆனந்த் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த் தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இவரது தாய் சரோஜ் டி ராம் பஞ்சாப்பை சேர்ந்தவர் தந்தை ஆனாந்த் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இருவரும் பிரலமான மருத்துவர்கள்.
இவர் கனடாவின் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக உள்ளார். Nova Scotia வில் பிறந்த இவர் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு Oakville நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 முதல் 2021 வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார். தேசிய பாதுகாப்பு அமைச்சரகாவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். COVID-19 காலக்கட்டத்தில் கனேடியர்களுக்கான தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வெளி நாடுகளில் இருந்து பெருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய போது ராணுவத்தில் பாலியல் முறைகேடுகளுக்கு தீர்வு காண சீர்திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம் அனைவரது ஆதரவையும் பெற்றார்.