கைவிட்ட மகன்கள்... கை, கால் செயலிழப்பு.. ஒரே இடத்தில் உணவில்லாமல் தவிக்கும் மூதாட்டி
பென்னாகரம் அருகே மகன்கள் கைவிட்டதால், நிழற்கூடத்தில் குடியிருக்கும் மூதாட்டி. கை, கால் வராத நிலையில், ஒரே இடத்தில் உணவில்லாமல் தவிப்பு.
தருமபுரி மாவட்டம் நாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசு நிழல் கூடம், பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிழல் கூடத்தை, தனது வாழ்விடமாக கொண்டு, கடந்த 4 ஆண்டாக ஒரு மூதாட்டி, கை கால் வராமல், உணவுக்கு வழி இல்லாமல் நடக்க முடியாமல், உடுத்தி இருக்கும் ஆடையை கூட மாற்ற இயலாமல், வாழ்ந்து வருகிறார். மேலும் உணவினை அந்த பகுதியில் இருப்பவர்களிடம் இரவல் பெற்று உண்டு தன் காலத்தை போக்கி வருகிறார். இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய் வாய்ப்பட்டு வலது கை, வலது கால் வராமல் எந்த அசைவின்றியும் ஒரே இடத்தில் இருந்து வருகிறார். அதே இடத்தில், சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும், உண்பதும், உறங்குவதுமாக இருந்து வருகிறார். மேலும் அக்கம் பக்கத்தினரும், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்களும் தரும் மிச்ச மீதி உணவுகளை உண்டு, அரை வயிறும், கால்வயிறுமாக வாழ்ந்து வருகிறார்.
இவரை பற்றி விசாரணை செய்தால், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரில் உள்ள கட்டிட மேஸ்திரிக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், இரண்டு மகன்கள் பிறந்த பின்பு, தன்னை விட்டு விட்டு தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாகவும், கஷ்டப்பட்டு மகன்களை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளேன். மேலும் தான் வேலைக்கு சென்று வருவாய் சம்பாதிக்கும் வரை தன்னை தனது மகன்கள் வைத்திருந்ததாகவும், அவர்களுக்கு திருமணம் ஆன பின்பு, தன்னால் உழைக்க முடியாத சூழ்நிலையில், தன்னை துரத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளா மற்றும் பெங்களூருக்கு மகன்களை பார்க்க சென்றுள்ளார். ஆனால் இருவரும் சேர்த்துக் கொள்ளாமல் திருப்பி ஊருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் யாரோ ஒருவரின் உதவியின் மூலம் பென்னாகரம் அருகே உள்ள நாகனூருக்கே வந்து, அதே நிழல் கூடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மணமுடைந்திருந்த அவருக்கு நோய்வாய்ப்பட்டு, வலது கை மற்றும் வலது கால் இயங்காமல் போய் உள்ளது. இந்நிலையில் மருத்துவமனை செல்லவும் வழி இல்லாமல், ஆதரவும் இல்லாமல், உணவும் இல்லாமல், நிழல் கூடத்திலேயே பரிதவித்து கிடக்கிறார் அந்த மூதாட்டி. எனவே இந்த மூதாட்டிக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களது மகன்களுடன் சேர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.