DMK Posters : திமுக போஸ்டர்களை கிழித்த பாஜகவினர் ; சாலை மறியல், தள்ளுமுள்ளு.. கோவையில் பரபரப்பு..
அவினாசி சாலையில் மேம்பால தூண்களில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டு இருந்த திமுக சுவரொட்டிகளை கிழித்து எறிந்த பா.ஜ.கவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை அவினாசி சாலையில் மேம்பால தூண்களில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டு இருந்த திமுக சுவரொட்டிகளை கிழித்து எறிந்த பா.ஜ.கவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோவை மாநகர பகுதிகளில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றிக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திய பின்னரும் கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பால தூண்களில் திமுகவின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருந்தது. அதே வேளையில் அந்த தூண்களில் பிற கட்சியினரின் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் திமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், அவினாசி சாலையில் பீளமேடு கொடிசியா அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்ட நிலையில் சாலையோரத்தில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.கவினருடன் போலீசாரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய திமுக சுவரொட்டிகளை பா.ஜ.கவினர் கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பிற்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
சுவரொட்டிகளை கிழித்த பா.ஜ.கவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சுவரொட்டிகளை கிழித்து ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட பா.ஜ.கவினரை போலீசார் இறக்கி விட்டனர். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை இடத்தை விட்டு நகர போவதில்லை எனக்கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர்.
பின்னர் வரும் 16 ஆம் தேதிக்குள் அமைதி குழு கூட்டம் நடத்த வேண்டும் எனவும், அதில் பேனர்கள் ஒட்டுவது தொடர்பாக ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். போஸ்டர் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படவில்லை எனில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என பாஜகவினர் அறிவித்து போராட்டம் நடத்தி வந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் பா.ஜ.கவினர் நடத்தும் போராட்டம் காரணமாக கொடிசியா சாலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்