Madame Web Review: எப்படி இருக்கு மேடம் வெப் திரைப்படம்? மீண்டும் ஒரு ஃபர்னீச்சரை உடைத்ததா சோனி?
Madame Web Review: மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் வெளியாகியுள்ள மேடம் வெப் திரைபடம் எப்படி இருக்கு என்பதை, இந்த விமர்சனத்தில் அறியலாம்.
S.J. Clarkson
Dakota Johnson, Sydney sweeney, Emma Roberts, Adam Scott
திரையரங்கு
Madame Web Review: மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் டகோடா ஜான்சன் நடிப்பில் மேடம் வெப் திரைபடம் உருவாகியுள்ளது.
சோனி சினிமாடிக் யூனிவெர்ஸ்:
ஸ்பைடர்-மேன் எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தற்போது மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸில், அந்த கதாபாத்திரம் தொடர்பான படங்கள் வெளியானாலுமே, ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் மற்றும் அதுசார்ந்த அனைத்து கதாபாத்திரங்களின் உரிமையையும் சோனி நிறுவனம் தான் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஸ்பைடர் மேன் உடன் தொடர்புள்ள கதாபாத்திரங்களை மையமாக கொண்டு, ஒரு புதிய சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்க சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான வெனாம் படம் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, மார்பியஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கிரேவன் தி ஹண்டர் எனும் மற்றொரு படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான், மேடம் வெப் எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது.
மேடம் வெப் திரைப்படம்:
மார்வெல் சினிமாவில் எப்படி ஒரு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரம் உள்ளதோ, அந்த அளவிற்கு வலிமையான ஒரு கதாபாத்திரமாக மேடம் வெப் கதாபாத்திரத்தை முன்னிறுத்த சோனி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அந்த கதாபாத்திரத்திற்கான ஆரிஜின் ஸ்டோரியாக தான் மேடம் வெப் திரைப்படம் வெளியாகியுள்ளது. அமேசான் காடுகளில் உள்ள விசித்திர சிலந்தியை தேடி, ஒரு கர்ப்பிணி பெண் பயணிக்கிறார். நீண்ட தேடுதலுக்கு பின் அந்த சிலந்தியை பிடிக்கும் பெண்ணை, அவருக்கு பாதுகாவலராக இருந்த நபரே துப்பாக்கியால் சுட்டு விட்டு சிலந்தியுடன் தப்பிக்கிறார்.
படுகாயமடைந்த பெண் அங்கிருந்த காட்டுவாசிகளால் மீட்கப்பட்டாலும், குழந்தையை பெற்றவுடன் இறந்துவிடுகிறார். பிறந்த குழந்தையான கேஸி/ மேடம் வெப் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் டகோடா ஜான்சன் நடித்துள்ளார். வளர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு, ஒரு விபத்தில் எதிர்காலத்தை பார்க்கும் சக்தி கிடைக்கிறது. இதன் மூலம், தனது தாயை கொன்ற நபரே மேலும் 3 இளம் பெண்களை கொலை செய்ய வருவதை அறிந்து, அவர்களை காப்பாற்ற கேஸி/ மேடம் வெப் கதாபாத்திரம் முயல்கிறது. அதில் அவர் வெற்றி பெற்றாரா, அவருக்கு சக்திகள் கிடைத்தது எப்படி என்பது தான் மீதிக்கதை.
படத்தின் பிளஸ்:
படத்தின் மிக முக்கிய பிளஸ் என்றால் அது கேஸி/மேடம் வெப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள டகோடா ஜான்சன் தான். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உழைப்பை முடிந்த வரை வெளிப்படுத்தியுள்ளார். பெரிய அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல், முயன்ற வரை இயல்பான கதைக்களத்தை அமைத்துள்ளனர். கிளைமேக்ஸில் ரசிகர்களை படத்துடன் ஒன்றச் செய்துள்ளனர். குறிப்பாக, அண்மையில் வெளியான சில மார்வெல் படங்களுடன் மட்டுமின்றி ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோ படங்களுடன் ஒப்பிடுகையில், மேடம் வெப் திரைப்படத்தை தாராளமாக 2 மணி நேரம் அமர்ந்து பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.
படத்தின் நெகட்டிவ்:
நெகட்டிவ் என சொல்ல வந்தால் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருப்பது போல, உண்மையாகவே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும். பெரும்பாலான முக்கிய அம்சங்களை, வெறும் வசனங்கள் மூலம் கடத்த முற்பட்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஸ்பைடர் மேனின் சக்திகளை கொண்டிருக்கும் வில்லனின் பின்புலம் என்ன? அவர் நோக்கம் என்ன? என்பதில் எந்த தெளிவும் இல்லை.
சமீப காலமாக ஹாலிவுட் படங்களில் வந்துபோகும், அதே வழக்கமான வில்லனாகவே வருகிறார், அடி வாங்குகிறார். சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்த்து தான் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு செல்வார்கள். ஆனால், மிகவும் கணிசமான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. படம் முடிந்தபிறகு டகோடா ஜான்சனை தவிர வேறு எந்தவொரு கதாபாத்திரமும், மனதில் நிற்காததும் படத்திற்கு பின்னடைவாக உள்ளது.
ஒரு வரி விமர்சனம்: மார்பியஸ் போன்று அல்லாமல் ஒருமுறை தாராளமாக திரையரங்கில் பார்ப்பதற்கு தகுதியான படம் தான் MADAME WEB