Haraa Movie Review: 14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
Haraa Tamil Movie Review: சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நடித்துள்ள ஹரா படத்திம் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம்
Vijay Sri G
Mohan , Anumol , Charu Haasan, Yogi Babu
Theatrical Release
ஹரா திரைப்பட விமர்சனம்
Haraa Movie Review in Tamil: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சில்வர் ஜுப்ளி ஸ்டார் மோகன் நடித்துள்ள ஹரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனுமோல், சாரு ஹாசன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, தீபா ஷங்கர், சுரேஷ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து மோகன் நடித்துள்ள ஹரா படம் அவருக்கு சரியான கம்பேக் படமாக அமைந்ததா என்பதை ஹரா படத்தின் இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
ஹரா படத்தின் கதை
கோயம்புத்தூரில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளிம் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேடிச் செல்கிறார் மோகன். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பணத்திற்காக தனியார் போலி மாத்திரை நிறுவனங்களை ஆதரிப்பது, கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு அவர்களைப் பழிவாங்குகிறார் மோகன்.
படத்தில் என்ன பிளஸ்?
ஹரா படத்தைப் பொறுத்தவரை அதன் சாதகமான அம்சங்களில் மோகனின் நடிப்பை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் காதன் நாயகனாக கலக்கிய மோகன் ஒரு தந்தையாக, ஒரு ஆக்ஷன் ஹிரோவாக தன்னை படம் முழுவதும் உயிர்ப்பாக வைத்திருக்க முயற்சிப்பது பாராட்டிற்குரியது. மோகனின் லுக், அவரது கூலான உடல்மொழி, அவரை தொடர்ச்சியாக நிறைய கதைகளில் பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. சண்டைக் காட்சிகளில் படத்தொகுப்பாளர் காட்சிகளை சுவாரஸ்யமாக வைத்திருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
மைனஸ்
படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் சொதப்பலான திரைக்கதை தான். மோகனைத் தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களின் நடிப்பும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. படத்தின் தொடக்கத்தில் இருந்தே பல முனைகளில் வெவ்வேறு கதைகளை ஒரே சமயத்தில் தொடங்கி வைக்கிறார் இயக்குநர். சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவதற்காக இதை செய்திருந்தாலும், முன்னும் பின்னும் பெரிய அளவில் பின்னணி இல்லாத கதாபாத்திரங்கள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன.
கம்பேக் கொடுத்தால் மெசேஜ் சொல்லும் படத்தில் தான் கொடுப்பேன் என்று சீனியர் நடிகர்கள் கேட்டு வாங்குகிறார்களா, இல்லை இவர்களுக்கு இதுதான் செட் ஆகும் என்று இயக்குநர்கள் முடிவு செய்கிறார்களா என்று தெரியவில்லை! ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை முடிந்த அளவு இயக்குனர் விஜய் ஶ்ரீ குறைத்திருக்கலாம். சீனியர் நடிகர்களை இக்காலத்துக்கு ஏற்ற வகையில் வேறு மாதிரி காட்டினால் சுவாரஸ்யம் கூடும்.
மேலும் தந்தை பாசம் என்கிற பெயரில் மோகன் செய்யும் அட்ராசிட்டிகளை எல்லாம் மெச்சூரிட்டி என்று எப்படி எடுத்துக்கொள்வது?. கோயம்புத்தூரில் நடக்கும் கதையில் ரவுடி முதல் போலீஸ் வரை எல்லாரும் சென்னை தமிழ் பேசுகிறார்கள். தாவுத் இப்ராஹிம் , நாயகன் வேலு நாயக்கராக சாரு ஹாசன் வருவது என சம்பந்தமே இல்லாமல் நிறைய முடிச்சுகளை போட்டிருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, வனிதா விஜயகுமார் என முகம் தெரிந்த நடிகர்கள் முதல் முகம், தெரியாத புது நடிகர்கள் வரை படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் யாருக்கும் வலுவான கேரக்டர் இல்லை.
ரஷாந்த் அர்வினின் பின்னணி இசை கதைக்கு கொஞ்சம் பலம் சேர்த்தாலும், பாடல்கள் அந்தக் கால பாசப்பறவைகள் மூடில் ரொம்ப உணர்ச்சிகளை பிழிந்து விடுகின்றது. ஹரா படம் மோகன் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் இந்தப் படத்தில் இருக்கும் சிறு சிறு தவறுகளை களைந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக கொடுக்க வாழ்த்துகள்!