என்னாது மராத்தி தெரியாதா? அப்போ அடி உதைதான்.. கண்டக்டரை பொளந்து கட்டிய பயணிகள்!
Karnataka: பெலகாவியின் புறநகர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு மராத்தியில் பதிலளிக்காத காரணத்தால் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு மராத்தியில் பதிலளிக்காததற்காக நடத்துனரைத் தாக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள பெலகாவி மாவட்ட புறநகர் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மராத்தி பேசாத கண்டக்டர் மீது தாக்குதல்:
கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் கணிசமான மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர், பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை கர்நாடக அரசும் பெலகாவியில் வசிக்கும் கன்னட மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதற்காக போராட்டம் எல்லாம் நடந்து அவ்வப்போது பெரும் பிரச்னையாக வெடிப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், பெலகாவியின் புறநகர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு மராத்தியில் பதிலளிக்காத காரணத்தால் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணில் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் சம்பவத்தை விவரித்த நடத்துனர் மகாதேவப்பா மல்லப்பா ஹுக்கேரி, "சுலேபாவி கிராமத்தில் ஆண் ஒருவருடன் பேருந்தில் ஏறிய பெண் மராத்தியில் பேசினார். எனக்கு மராத்தி தெரியாது என்று கூறி கன்னடத்தில் பேச சொன்னேன்.
நடந்தது என்ன?
அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். திடீரென்று ஏராளமான மக்கள் கூடி என்னை தாக்க தொடங்கினார்கள்" என்றார். காயமடைந்த நடத்துனர் பெலகாவி மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தில் இருந்து தப்பிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடத்துனரைத் தாக்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு பேரைக் கைது செய்துள்ளோம். 14 வயது சிறுமி அளித்த எதிர்ப் புகாரின் அடிப்படையில், நடத்துனருக்கு எதிராக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன்னை அவதூறாக பேசியதாக சிறுமி ஒருவர், நடத்துனருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
போக்சோ சட்ட வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுகளை விசாரித்து, அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

