Chemmarai Dog : 'இதுவரை யாரும் அதிகம் பேசாத செம்மறை' வேட்டை நாய்களின் வரலாறு..!
எதோ ஒரு தலைமுறையில் ஒரு நாட்டு நாய் கலப்பு கன்னி / சிப்பி நாய்களில் ஏற்பட அதனுடைய வழி பல தலைமுறை தாண்டியும் எதோ ஒரு ஈற்றில் குட்டியாக வெளிப்படுகிறது என்ற நம்பிக்கை செம்மறை நாய்கள் பற்றி உண்டு
வேட்டைத்துணைவன் - 21
கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி- 13
இதுவரை யாரும் அதிகம் பேசாத செம்மறை நாய்கள் பற்றி :-
கன்னி / சிப்பிப்பாறை நாய்களில் நிறங்கள் குறித்த பட்டியலை இடும்போதெல்லாம் எனக்கு தயக்கம் ஏற்படுத்தும் நிறமொன்று உண்டென்றால் அது செம்மறை நிறமாகத்தான் இருக்கும். தயக்கம் நிறம் பொருட்டு மட்டும் அல்ல. அதன் தனித்துவம் குறித்து. அது பற்றி சொல்லும் போது கூடவே முளைத்து எழும் போலிகள் குறித்து. அதை களைவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து.
மேச்சல் சமூக நிற அடிப்படையோடு பார்த்தால் இந்நிறம் மாடுகளிலும் உண்டு. செம்மை + மறை. செம்மை என்பது சிவப்பு அதாவது செவலை. மறை என்பது அதில் வரும் வெள்ளை திட்டு. அதே நேரம் இந்நிறத்தை நாய்களில் செம்பறை நாய் என்று சொல்வோரும் உண்டு. பிரித்தால் செம்மை + பறை என்று வரும். முன்னதாக நண்பர் ஒருவர் எனக்குச் சொன்ன கதை நியாபகம் வருகிறது.
“ஜமீன் ஒருவர் தொடர்ந்து வேட்டைக்கு நாய்களைக் கூட்டி செல்வதில் ஆர்வமாக இருந்தாறாம். அப்படி போகும்போதெல்லாம் தன்னுடைய நாய்களை ஓட்டத்தில் மிஞ்ச யாருமே இல்லை என்ற கர்வம் கொண்டாறாம். அதற்கு தகுந்தார்போல அவருடைய நாய்கள் அழகிலும் சரி வேட்டையிலும் சரி குறைவில்லாமல் விளையாடியதாம். அப்படி நாய்களை வைத்திருப்பவர், அதிலும் செல்வாக்கு உள்ளவர். எப்புடி அந்த நாய்களின் வழியை வெளியே விட மனம் உகந்து முன்வருவாரா? ஆனாலும் அந்த நாய்களின் வழியில் இருந்து எப்படியாவது ஒரு குட்டி எடுக்க வேண்டும் என்று பலருக்கு ஆசை இருந்ததாம்.
அதில் ஒருவர் ஜமீனுடைய நாய்களை பராமரிக்க அமர்த்தப் பட்டிருந்தவரின் உறவினர். அவரை வைத்துக்கொண்டு எப்படியாவது அதில் இருந்து வழி எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து பணியளரை வற்புறுத்தி ஒரு நாள் பணியாளர் உதவியுடன் தன்னுடைய பெண் நாயோடு ஜமீனுடைய ஆண் நாயை யாருக்கும் தெரியாமல் இணை சேர்த்து விடுகிறார். ஆண் நாய் சுத்தமான கன்னி / சிப்பிப்பாறை நாய். பெண் நாயோ பருவெட்டான நாட்டு நாய். அந்த ஈத்தில் நல்ல குட்டியை மட்டும் எடுத்து நிறுத்துகிறார்.வேட்டைக்கு பழக்குகிறார். நாய் வலுவான பிறவியாக வாய்க்கிறது.
2, 3 வருடங்களுக்குப் பின் அந்த நாய் ஓட்டம் பற்றி ஜமீன் அறிய நேர்கிறது. எப்போதும் நிறையா நாய்களுடன் வேட்டைக்குச் செல்லும் ஜமீன் அந்த நாய்களையும் வேட்டைக்கு அழைத்து வரச் சொல்கிறார். களம் பார்க்க படுகிறது. ஓடிய ஓட்டத்தில் ஜமீன் பிரமித்து போகிறார். 2, 3 முறை ஆள் விட்டு அந்த நாயை வேட்டைக்கு அழைத்து ஓட்டம் பார்த்த பின் ஜமீன் குழம்பி போகிறார். கூடவே கோவமும் வருகிறது. இவ்வளவு வேகம் அதுவும் இவனுடைய நாய்க்கு ! லச்சனம் வேற நல்ல முறையில் அமைந்து இருக்கிறது. வேறு எங்கோ என்றாள் கூட இருக்கலாம் யாரிடமாவது நல்ல நாய் என்று மனதை தேற்றலாம் ஆனால் இவன் நமது நிழலில் வாழ்பவன் இவனுக்கு இப்படி நாய் கிடைக்க எந்தச் சாத்தியமும் இல்லையே என்ற எண்ணம் தீவிரம் அடைய தனது நாய்களை பராமரிப்பவனை அழைத்து கோவமாக விசாரிக்க உண்மை புடிபடுகிறது.
மேற்படி ஆளுக்கும் நிலவரம் லேசாகத் தெரியும் முன்பு ஜமீன் வீட்டு வேலையாட்கள் ( வேட்டைக்கு வருபவர்கள் ) வந்து வேட்டை நாய் தேவைப்படுகிறது நீ வந்தாலும் சரிதான் நாயை மட்டும் அனுப்பி வைத்தாலும் சரிதான் என்று சொல்லவும் நாயை வேட்டைக்கு அனுப்பி வைக்க, முழுதாக 2 நாள் ஆகியும் நாய் வீடு திரும்பவில்லை. உரிமையாளருக்கு வளர்த்த பாசம் ஒரு புறம் இதற்கு ஜமீனை மறித்து கேக்க பயம் ஒரு புறம். மூன்றாம் நாள் காலை ஜமீன் வண்டி வரும் பாதையில் காத்திருந்து ஆளைக் கண்டதும் பெரிய கும்புடு ஒன்று போட்டு, “ராசா வணக்கம் ! ஏன் நாய் இன்னும் வீடு வரல ராசா” என்று பவ்வியமாக கேட்டிருக்கிறார். மேலும் கீழும் பார்த்த ஜமீன்,
“அது உன்னோட நாய்தானோ என்னடா நாய் அது? ஒழுங்கு இல்லாத கழுதயா இருக்கு. நம்ம நாயப் பாத்துகிட்டு கடிக்க வருது. சரி அது உனக்கும் ஆவது எனக்கும் ஆவது பின்ன எதுக்குனு தான் அடிச்சு கொன்னு போட்டாச்சு ” எனச் சொன்ன வேகத்தில் வண்டி கிளம்பிவிட்டது.
பதறி அடித்துக்கொண்டு வேட்டைக்காடு எல்லாம் தான் பிரியமாக வளர்த்த நாயினது சடலத்தை தேடியவருக்கு எதோ உள்ளுணர்வு தட்டுப்பட கருவேலங்காட்டு பக்கம் போய் பார்த்த போது ஒரு மரத்தடியில் எலும்புதாக்கான நாய் ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டு கிடப்பது தெரிந்தது. அவர் நாயே தான். எடுத்துக்கொண்டு ஓடி எப்படியோ கை வைத்தியம் செய்து நாயை காப்பாற்றி விடுகிரார். இங்கு வாழ்வது சிக்கலில் முடியும் என்பதை உணர்ந்து வேறு ஓர் ஊருக்கு புலம் பெயர்கிறார். அவருடைய அந்த நாய் உடைய வழிகளே செம்பறை நாய்கள் “
என்பதே அவர் சொன்ன கதை. இக்கதையின் உண்மைத் தன்மையை என்னால் உறுதி படக் கூற இயலவில்லை. சமூக ஊடகங்களிலோ இப்படி கதைகள் உண்டு என என்னால் மூச்சு கூட விட முடியாது. நாளைக்கே வரும், “ஜமீனின் கோவம் – மாறாத சோகம்”, “ செம்மறை நாய்களின் தடம் தேடி” என்ற தலைப்பில் பதிவிறங்க காத்திருக்கும் வீடியோக்கள் குறித்த பயம் தான் வேறென்ன.
இப்படியான வீடியோக்கள் மேல கூறிய கதைகளில் இருந்து பல மடங்கு இயல்புக்கு மீறி சுவாரசியம் பொருட்டு பெருக்கப்படுகிறது. அது முதல் முறையாக வேட்டை நாய் பக்கம் திரும்புபவர்களை பெரிய வியப்புக்கும் ஆர்ச்சர்யத்துக்கும் உள்ளாக்குகிறது. இது தானே நமது பாரம்பரியம் என்று புளகாங்கிதம் அடைய வைக்கிறது. அப்படி போடும் வீடியோகள் அனைத்தும் அதே வழி நாய் குட்டிகள் வாங்க என்ற என்னோடு தான் வருகிறது.
நாய்கள் இன்னமும் அப்படியே அதே ஜமீன் வழியில் உள்ளது என்று ஒரு காணொளி கண்டால் ஓடி வந்து ஏமாற வைக்கிறது. 50 -60 களிலேயே ஜமீன்கள் வளர்க்கும் நாய்களுக்கு நிகரான அதுக்கும் மிச்சமான நாய்கள் அடுத்த வேலை உணவுக்கு உறுதி இல்லாத சாமானியனின் வீட்டில் உண்டு என்ற உண்மையை அறிந்தால் நாய் வாங்கும் ஆசையையே விட்டுவிடும் இந்த படித்த போலி கௌரவ கோஷ்டிகளுக்கு! வெள்ளை மோகம் வந்தவுடன் வெள்ளைக்காரன் நாய்களை கட்டி அழுத ஜமீன்கள் தான் இங்கு அதிகம். இந்த வேட்டை நாய்கள் எல்லாம் சாமானியர்கள் கைக்கு தான் மாரி இருந்தது.சரி அப்போது அந்த சாமானியர்கள் இந்த நாய்களை இயல்பாக பரவ வழி செய்தார்களா? இல்லவே இல்லை மேல சொன்னது போல பல மடங்கு வக்கிரம் இங்கும் இருந்தது. காரணம் இந்த நாய்கள் வைத்திருப்பதனாலயே அவர்களும் கௌரவ வளையம் போட்டுக்கொண்டனர்.
மேல சொன்னது போல கதைகளை இங்கு எழுதலாம் எழுத வேண்டும் காரணம் இயல்புக்கு மீறி சகட்டு மேனிக்கு வீடியோ போடும் யாவரும் இவற்றை வசிப்பதில்லை. வசிப்பவர்கள் இப்படியான வீடியோகளை வியந்து பார்ப்பதும் இல்லை. போக மேல சொன்ன கதைகளில் உள்ள உண்மை தன்மையை அதன் சாத்தியத்தை வாசிப்பவர்கள் பகுத்து பார்க்கிறார்கள். அல்லது பகுத்துக் கூறியதை விளங்கிக் கொள்கிறார்கள்.
எப்படி, முன்பு “யாரோ ஒரு வெள்ளக் காரன் ஒருத்தன் கப்பல்ல வந்து இந்த நாய இறக்கி விட்டுட்டு போய்ட்டான். அந்த நாய் நல்லா ஓடவும் நம்ம ஆள்க அத ஒடச்சு உண்டாக்கிட்டாங்க’’ என்ற கதையை பிடித்து அதில் ஒட்டிய ஒரு உண்மையை கண்டு அறிந்தோம் அல்லவா அப்படி! இந்த கதைகள் ஒரு வகையில் முக்கியமான folklore knowledge கள். அதை சரியான முறையில் பகுத்து ஆராய வேண்டும்.
இன்னமும் கூட இந்நிறம் என்பது பலர் மத்தியில் கழிவான நிறமாகத்தான் இருக்கிறது. ஏன் என்றால், எதோ ஒரு தலைமுறையில் ஒரு நாட்டு நாய் கலப்பு கன்னி / சிப்பி நாய்களில் ஏற்பட அதனுடைய வழி பல தலைமுறை தாண்டியும் எதோ ஒரு ஈற்றில் குட்டியாக வெளிப்படுகிறது என்ற நம்பிக்கை செம்மறை நாய்கள் பற்றி உண்டு. இப்போதைக்கு இந்த ஒரு புள்ளையை எடுத்துக்கொள்வோம்.
ஒரு வகையில் நாட்டு நாய் கலப்பு இதில் உண்டு என்று எடுத்து, பறையா நாய்கள் என்ற பெயர் நாட்டு நாய்களைக் குறிக்க பயன்படுத்தினர் என்பதையும் கணக்கில் எடுத்தால் இது செம்மறை அல்ல செம்பறை தான் என்ற முடிவுக்கு வரலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம் இப்படி பெயரிடுதல் எழுத்து மொழி மூலம் வந்தது தானே அன்றி நம்மிடம் வழக்கில் இல்லை. நாட்டு நாய் அல்லது கொச்சி நாய் அல்லது குப்பை நாய் என்பதுதான் எங்கு வழக்கு. போக இதில் கருப்பு + வெள்ளை மறை உண்டு. அப்படிப் பார்த்தால் அதற்க்கு கருமறை என்றுதான் பெயரே அன்றி கரும்பறை அல்ல !
நாட்டு நாய் கலப்பு அதில் உண்டு என்று எடுத்துக் கொண்டால் இப்போது கலந்தாலும் அப்படி உருவாகும் அல்லவா ? அப்படி கலந்த நாய்களுக்கு ஒன்றும் இந்த பெயர் வழங்க வில்லையே ! நாட்டு நாய் vs கன்னி / சிப்பி நாய் கலப்புக்கு இருபிளட் என்றுதான் பெயர் ( இருபிறவு என்ற பொதுவான சொல் தான்). அதில் இருந்து செம்மறை தனித்துவமானதா? எந்த விதத்தில்? பார்க்கலாம்.