விழுப்புரத்தில் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு...!
’’பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்ற மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’
விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகள், மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூறுநாள் வேலை நடைபெறும் பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 1,150 இடங்களில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் (48) தனது தாய் கண்ணம்மாவுடன் (70), வந்து, அங்கிருந்த மருத்துவத்துறை ஊழியர்களிடம், தனது தாய்க்கு விட்டலாபுரத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு முகாமின் போது, மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதனால், அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என, கேட்டார். அப்போது முகாமிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மோகனிடமும் முறையிட்டார். சிவக்குமார் கூறுகையில், ஏற்கனவே என்னுடைய தாயாருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலையின் போது, சுகாதாரத் துறை சார்பில் போடப்பட்டது.
NEET Suicide : நீட் தேர்வு.. தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ்
நேற்று காலை நான் நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில், என்னுடைய தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஏற்கனவே அவர் தடுப்பூசி போட்டுள்ளாரா என்ற விவரத்தைக் கேட்காமல், அவருக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இது குறித்து தடுப்பூசி போட்டவர்களிடம் கேட்ட போது, திண்டிவனத்திற்கு சென்று டாக்டரிடம் கேட்கும்படி கூறியதால் இங்கு வந்து புகார் தெரிவித்தேன்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கூறிய போது, மருத்துவரிடம் கூறும் படி தெரிவித்து சென்று விட்டார். மருத்துவரிடம் கேட்ட போது, அவருடைய மொபைல் எண்ணைக் கொடுத்து, ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்யும் படி கூறியுள்ளார் என்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ
இதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்றைய தினம் ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு மீண்டும் செவிலியர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )