NEET UG Exam Pattern 2025: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET UG 2025 Revised Exam Pattern: நீட் தேர்வு கேள்வித் தாள் முறையும் தேர்வு நேரமும் கோவிட் காலத்துக்கு முந்தைய முறைக்கு மாற்றப்படுகிறது. இதன்படி, செக்ஷன் பி என்னும் தெரிவு இனி நடைமுறையில் இருக்காது.

NEET UG 2025 Revised Exam Pattern: மருத்துவ இளநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும் ரத்து செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
’’அனைத்து இளங்கலை நீட் தேர்வர்களுக்கும் (NEET (UG)- 2025) முக்கிய அறிவிப்பு வெளியாகிற்து. அதன்படி, கேள்வித் தாள் முறையும் தேர்வு நேரமும் கோவிட் காலத்துக்கு முந்தைய முறைக்கு மாற்றப்படுகிறது. இதன்படி, செக்ஷன் பி என்னும் தெரிவு இனி நடைமுறையில் இருக்காது.
180 கேள்விகளும் கட்டாயம்
இதன்மூலம் மொத்தம் 180 கேள்விக்குக் கட்டாயம் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியல் பாடத்தில் 90 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். மொத்தம் 180 கேள்விகளுக்கும் விடை தர வேண்டியது முக்கியம்.
இதை 180 நிமிடங்களில் அதாவது 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் கொரோனா காலத்தில் ஆப்ஷனல் கேள்விகள் அளிக்கப்பட்டதும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது’’.
இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஒரே ஷிஃப்ட்டில் பேனா, காகித முறையில் நீட் தேர்வு
ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு ) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும், இந்திய மருத்துவ முறையின் BAMS, BUMS மற்றும் BSMS உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு தேவை என்று NTA அறிவித்தது. தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் கீழ் BHMS படிப்பிற்கான சேர்க்கைக்கும் நீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் NTA தெரிவித்துள்ளது.
மேலும், எம்என்எஸ் (மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்) விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. 2025 ஆம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் நர்சிங் படிப்புகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிவிக்கைக்கு https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/01/20250125100.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
அதேபோல 011 - 40759000 என்ற தொலைபேசி எண் மூலமும் neetug2025@nta.ac.in இ- மெயில் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.neet.nta.nic.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

