Titanic : இப்படி ஒரு தீவிர ரசிகரா? 5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன டைட்டானிக் மரக்கதவு!
Titanic : டைட்டானிக் படத்தில் ஜாக் மற்றும் ரோஸ் கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்திய மரக்கதவு அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்பட கூடிய எவர்க்ரீன் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படம் 'டைட்டானிக்'. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி பெரிய விபத்துக்குள்ளானது டைட்டானிக் கப்பல். இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் ஒரு காதல் கதையை சேர்த்து மிக அழகான ஒரு காவியமாக 'டைட்டானிக்' என்ற படத்தை உருவாக்கியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அபரிதமான வசூலையும் குவித்து சாதனை படைத்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் என 11 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை குவித்தது.
படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக 12 ஆயிரம் அடி டீப் டைவ் செய்து டைட்டானிக் கப்பலை நேரில் சென்று படம் பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இப்படம் 740 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டில் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான முதல் படம் இதுதான். இப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்ததுடன் பில்லியன் கணக்கில் வசூலையும் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் நாயகன் ஜாக், நாயகி ரோஸ் காதலையும் அவர்கள் அந்த பிரம்மாண்ட கப்பலில் நிற்கும் காட்சியையும் மறக்கவே முடியாது. இப்படம் வெளியாகி 27 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அதே உற்சாகத்துடன் ரசிக்கப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு படத்தை அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.
டைட்டானிக் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோஸை ஜாக் காப்பாற்றி ஒரு மர கதவு மேல் படுக்கவைத்து இருப்பார். மரக்கதவை பிடித்தபடி ஜாக் மிதந்து கொண்டு இருப்பார். அப்படி ஜாக் மற்றும் ரோஸ் மிதக்க பயன்படுத்திய அந்த மரக்கதவு தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அதை 5 கோடி ரூபாய்க்கு ஒரு தீவிர ரசிகர் ஏலம் எடுத்துள்ளார்.
டைட்டானிக் படத்தில் பயன்படுத்திய மரக்கதவு மட்டுமின்றி 1984ம் ஆண்டு வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்' பயன்படுத்தப்பட்ட சாட்டை, 1980ம் ஆண்டு வெளியான 'தி ஷைனிக்' படத்தில் பயன்டுத்தப்பட்ட கோடாரி உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்பட்டன. ஆனால் மற்ற பொருட்களை காட்டிலும் டைட்டானிக் படத்தில் பயன்படுத்தப்பட்ட மரக்கதவு தான் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.