Stunt Master Judo Ratnam : ஆவேசமாக குதித்து மொக்கை வாங்கிய டி.ஆர்...! மனுஷனடா என திட்டிய சத்யராஜ்...! ஜூடோ ரத்தினம் கலகல
மூத்த ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்னம் நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் சத்யராஜ் இடையே படப்பிடிப்பு சமயத்தில் நடைபெற்ற மோதல் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 1000க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் 93 வயதாகும் ஜூடோ ரத்தினம். இந்த மூத்த ஸ்டண்ட் கலைஞர் தனது 60 ஆண்டுகால திரைப் பயணத்தில் சினிமாவின் வரலாற்றை முழுமையாக அறிந்தவர். அவர் தனது அனுபவத்தில் சந்தித்த நடிகர் நடிகைகள் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.
அப்படி அவர் பகிர்ந்ததில் சுவாரஸ்யமான ஒன்று நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் டி. ராஜேந்தர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு மோதல். அவர்கள் மத்தியில் நடைபெற்ற அந்த மோதலை மிகவும் நகைச்சுவையோடு பகிர்ந்து இருந்தார் மூத்த ஸ்டண்ட் கலைஞர் ஜூடோ ரத்தினம்.
ஆல் இன் ஆல் அழகு ராஜா டி.ஆர் :
இன்று டி.ராஜேந்தரை வைத்து பல மீம்ஸ்கள் வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் அவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் என்பதால் இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் குறைவு தான். கதை, திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட நடிகராக இருந்தவர். அவருடைய படங்கள் பெரும்பாலும் 100 நாட்களை கடந்த வெற்றி படமாகவே இருக்கும். டி. ராஜேந்தரின் அடைமொழி வசனங்கள் தான் அவரின் தனி சிறப்பு. அதே போல ஒரு வில்லனாக அறிமுகமாகி சிறந்த ஹீரோவாக குணச்சித்திர நடிகராக இன்றும் கலக்கி வரும் நடிகர் சத்யராஜ்.
வயிற்றில் குத்து வாங்கிய சத்யராஜ் :
இந்த இரண்டு மகா நடிகர்களுக்கும் இடையில் ஒரு தரமான மோதல் நடைபெற்றுள்ளது. உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம் என்ற படங்களில் சத்யராஜ் மற்றும் டி. ஆர் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் சண்டை காட்சிகளுக்கு ஜூடோ ரத்தினம் தான் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து இருந்தார். அவர் மிகவும் பக்குவமாக எப்படி சண்டை போட வேண்டும் என டி.ஆருக்கு சொல்லி கொடுத்துள்ளார். ஷாட் ஆரம்பித்தவுடன் சத்யராஜை மாங்கு மாங்கு என வயிற்றில் குத்த கோபமான சத்யராஜ் "மனுஷனாடா நீ, இப்படி வயித்துல குத்துற... மாஸ்டர் எவ்வளவு பக்குவமா சொல்லி கொடுத்தாரு... நானும் மனுஷன் தானே இப்படியா குத்துவ..." என கத்திவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டே சென்றுவிட்டாராம்.
சொல் பேச்சு கேட்காத டி.ஆர் :
அதே போல ஒரு காட்சியில் ஜீப்பில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி டி.ஆருக்கு. நீங்கள் குதிப்பது போல ஆக்ட்டிங் செய்யுங்கள் நிஜமாக குதிக்க வேண்டாம் ரிஸ்காகி விடும் என்று கூறியதையும் கேட்காமல் நீ செய்யும் போது என்னால் மட்டும் முடியாதா? என அவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஜீப்பில் இருந்து குதிக்க கால் எலும்பு முறிவு ஏற்பட்டு "ஐயோ.. அம்மா.." என கதறினாராம் டி.ஆர். அதனால் ஷூட்டிங் பேக் அப் ஆனது. இதை சொல்லி சிரி சிரி என சிரித்தார் ஜூடோ ரத்தினம். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது.