SPB Voice: AI மூலம் பயன்படுத்தப்பட்ட எஸ்.பி.பி., குரல்.. ஒருவாரமாகியும் ஓயாத ரசிகர்கள் விவாதம்
பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர் எஸ்பிபி குரலை பயன்படுத்தியதற்காக அவரது மகன் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் ஒருவாரம் கடந்த பின்னும் இன்னும் ரசிகர்களிடையே பேசுபொருளாகவே உள்ளது.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களிலும் பயன்படுத்தி விடுவது தான் சிக்கலாகி வருகிறது.
இதன்மூலம் பிரபல நடிகைகளாக ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டவர்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களும் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த வாரம் மறைந்த பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை அனுமதியின்றி தெலுங்குப் படமான கீதா கோலாவில் பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினார்.
எஸ்பிபி குரல் பயன்படுத்தப்பட்ட விஷயத்தை கீடா கோலா இசையமைப்பாளர் விவேக் சாகரும் ஒப்புக் கொண்டார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்த போதிலும், வணிக நோக்கங்களுக்காக குடும்பத்தினரின் அனுமதியின்றி செய்யப்பட்ட இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.
மேலும் இப்படியான நிலை தொடர்ந்து நீடித்தால் இசைத்துறையில் மதிப்புமிக்கவர்களாக இருக்கும் தற்போதைய மற்றும் வருங்கால பாடகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். முறைப்படி அனுமதி பெறாமல் தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் எனவும் எஸ்பிபி சரண் கேட்டிருந்தார்
இந்த சம்பவம் ஒருவாரம் கடந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசுபொருளாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எஸ்பிபி மறைந்த நிலையில் அவரது குரலை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கேட்டது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Madhumitha: போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!