ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup India Scenatrios Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

ICC T20 World Cup India Scenatrios Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்புகள்:
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வென்று ஆதிக்கம் செலுத்திய, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், இதில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற 76 ரன்கள் வித்தியாசத்திலான ஒரே தோல்வியானது, சூர்யகுமார் தலைமையிலான அணியின் அரையிறுதி வாய்ப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. காரணம் அந்த தோல்வியானது புள்ளிகளை மட்டும் பறிக்காமல், அணியின் ரன் ரேட்டை -3.8 என்ற மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி 5.30 மற்றும் தென்னாப்ரிக்கா அணி 3.80 என்ற வலுவான ரன்ரேட்டுடன், தலா புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதனால், இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு என்பது பல்வேறு கணக்கீடுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
| மேற்கிந்திய தீவுகள் | 1 | 1 | 0 | 2 | 5.350 |
| தென்னாப்ரிக்கா | 1 | 1 | 0 | 2 | 3.80 |
| இந்தியா | 1 | 0 | 1 | 0 | -3.80 |
| ஜிம்பாப்வே | 1 | 0 | 1 | 0 | -5.30 |
சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள போட்டிகள் - க்ரூப் 1
- தென்னாப்ரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் அகமதாபாத்தில் மோதும் போட்டி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது
- இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது
- ஜிம்பாப்வே - தென்னாப்ரிகா அணிகள் மோதும் போட்டி மார்ச் 1ம் தேதி டெல்லியில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது
- இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி மார்ச் 1ம் தேதி கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது
இந்திய அணி இனி ஒரு சிறிய தவறு செய்வதற்கான அவகாசமும் இல்லை. சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெல்வதோடு, தனது ரன் ரேட்டை மேம்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டும். அந்த வகையில் மட்டுமே தனது அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி தக்க வைக்க முடியும்.
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு - 4 முக்கியமான முடிவுகள்
சூழல் -1: தென்னாப்ரிக்கா ஆதிக்கம்:
இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள தனது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, தென்னாப்ரிக்கா அணியும் தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் தென்னாப்ரிக்கா அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 4 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தையும் உறுதி செய்யும். இந்த சூழலில் ரன்ரேட் எதவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
சூழல் - 2: ரன் ரேட்டின் ஆதிக்கம்:
இந்திய அணி தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றபோதிலும், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளில் சமநிலை வகிக்கும். அப்போது, ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த நேரத்தில் தனக்கான வாய்ப்பை தக்கவைக்க, இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (சுமார் 80+ ரன்கள்) வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி இருக்கும்.
சூழல் - 3: தென்னாப்ரிக்கா இரண்டிலும் தோற்றால்
ஒருவேளை இந்தியா தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தென்னாப்ரிக்கா அணி மீதமுள்ள இரண்டிலும் தோல்வியுற்றால், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஜிம்பாப்வே அணி மிகப்பெரிய ரன் ரேட்டை பெறாமல் இருண்டால் மட்டுமே மேற்குறிப்பிடப்பட்டது சாத்தியமாகும்.
சூழல் - 4: இந்தியா ஒன்றில் மட்டும் வென்றால்
சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்தியா வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிடும். அதேநேரம், தென்னாப்ரிக்கா மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்று, அதனால் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் ரன்ரேட் மோசமாக சரிந்தால் மட்டுமே, இந்திய அணி 2 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் கடினமாக இருப்பதால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெல்வதே இந்தியாவிற்கு நல்லது.





















