Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
கவுரவ விரிவுரையாளர்களுக்கு இனி மகிழ்ச்சி! ஊதிய உயர்வு அறிவிப்பு: அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட முக்கிய தகவல்

அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1 முதல் ஊதியம் ரூ.5 ஆயிரம் உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். இதன்படி மாதந்தோறும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
அதேபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம் 9,646 ஆசிரியர்கள் பயன் பெறுவர் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
38 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்
மேலும் உயர்கல்வித் துறை அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ’’அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கிராமப்புற மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் 2021-26 ஆம் ஆண்டில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 18,760 மாணாக்கர்கள் கூடுதலாக பயனடைந்துள்ளனர்.
அதேபோல், 250-க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளினால் மேல்நடவடிக்கை தொடரப்படாத நிலையில் தற்போது 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 5 பாடப்பிரிவுகளுக்கு உதவிப்பேராசிரியர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
25 ஆயிரம் ஆக உயர்வு
மாணாக்கர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த ஊதியம் 2022-ல் ரூ.15,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இவ்வரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கௌரவ விரிவுரையாளர்கள் 01.03.2026 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டிற்கு ரூ.53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
9,646 தற்காலிக ஆசிரியர்கள் பயன்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேரும் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் ஆக மொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடைவர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-26-ஆம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் தொடங்கப்பட்ட "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிடைமருதூர்" என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
சம வேலைக்கு சம ஊதியம்
அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையான பணியைச் செய்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள், நிரந்தர உதவிப் பேராசிரியர்களைப் போலவே தங்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























