(Source: ECI/ABP News/ABP Majha)
Fahadh Faasil Movie Dhoomam: சீட்டின் நுனியில் அமரவைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்.. ஃபஹத் ஃபாசிலின் தூமம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமான 'தூமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.
நடிகர் ஃபஹத் ஃபாசில் - நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஃபஹத் ஃபாசில்
மலையாள சினிமா தாண்டி தமிழ், தெலுங்கிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் ஃபஹத் ஃபாசில்.
இறுதியாக மலையான்குஞ்சு மலையாளப் படத்தில் ஃபஹத் நடித்திருந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் இணைந்து நடித்து ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கிலும் தற்போது கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமான 'தூமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்து வருகிறது. கேஜிஎஃப் படத்தை இயக்கி புகழ்பெற்ற கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கன்னட ’லூசியா’ இயக்குநரின் படம்
பெரும் பாராட்டுகளைப் பெற்ற கன்னட திரைப்படமான லூசியா (தமிழில் சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன்), தமிழ் - தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான யூ டர்ன், திரைப்படங்களை இயக்கி கவனமீர்த்த பவன் குமார் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
மேலும், மகேஷிண்டே பிரதிகாரம் படத்துக்குப் பிறகு அபர்ணா பாலமுரளியுடன் ஃபஹத் இந்தப் படத்தில் இணைகிறார்.
பிரபல நடிகர் ரோஷன் மாத்யூ இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். பூர்ண சந்திர தேஜஸ்வி இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் புனைவா?
ஏற்கெனவே அறிவியல் புனைவுப் படங்களை இயக்கி பவன் குமார் கவனமீர்த்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் வித்தியாசமாகக் காட்சியளிக்கும் நிலையில் இதுவும் அறிவியல் புனைவாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இருக்கையின் விளிம்பில் அமரவைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு திருப்பத்திலும் உங்களை யூகிக்கத் தூண்டும் வகையில் இந்தப் படம் இருக்கும் எனக் கூறி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: அயோத்தி ஹீரோயினை நமக்கு முன்னாடியே தெரியுமா... இவங்களா இது...? மீண்டும் ட்ரெண்டாகும் பழைய வீடியோ!