Raghava Lawrence : 150 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்... ஒத்திவைக்கப்பட்டதா ருத்ரன் ரிலீஸ் தேதி... காரணம் என்ன?
ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் பின்னர் ஒரு நடிகர், இயக்குநராக பன்முக கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ருத்ரன், சந்திரமுகி 2 , அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ருத்ரன் இசை வெளியீட்டு விழா :
அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' நிறுவனத்தின் சார்பில் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ள 'ருத்ரன்' திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. சுமார் 3000 பேர் கலந்துகொண்ட இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ராகவா லாரன்ஸ் புதிய முயற்சி :
ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவை அவர் ஏற்க உள்ளதாக தெரிவித்து கொண்டார். மேலும் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த புதிய முயற்சியில் ஈடுபடுவதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கம் மூலமும் பகிர்ந்து இருந்தார். ராகவா லாரன்ஸ் இந்த பதிவிற்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ராகவா லாரன்ஸ் 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் மற்றும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு :
'ருத்ரன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள சில கெட்ட வார்த்தைகளை வெட்டி நீக்கியது தணிக்கை குழு. மேலும் சமீபத்திய தகவலின் படி ருத்ரன் திரைப்படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படத்தின் டப்பிங் உரிமையை பெற்று இருக்கிறது ரெவன்சா நிறுவனம். தயாரிப்பு நிறுவனத்துடன் ரூ.12.25 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டதில் 10 கோடி முன்பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் 4.5 கோடி ரூபாய்க்கான ஒப்பந்ததை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்துள்ளதால் ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 14ம் வெளியாக இருந்த திரைப்படம் ஏப்ரல் 24 தேதி வரை வெளியிட தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.