24 Years of Sangamam: 24 ஆண்டுகளை கடந்த சங்கமம் படம்.. சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
கலையை வைத்து மையமாக வந்த படங்களில் மிக முக்கியமான ஒன்று “சங்கமம்”. இன்றோடு அந்த படம் வந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தில்லானா மோகானம்பாள், கரகாட்டக்காரன் பட வரிசையில் கலையை வைத்து மையமாக வந்த படங்களில் மிக முக்கியமான ஒன்று “சங்கமம்”. இன்றோடு அந்த படம் வந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சங்கமித்த பிரபலங்கள்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ரகுமான் ஹீரோவாக நடித்தார். கதாநாயகியாக விந்தியா இந்த படத்தில் அறிமுகமானார். மேலும் மணிவண்ணன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வடிவேலு, சார்லி, ராதாரவி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
வழக்கமான கலை தொடர்பான படங்களில் உள்ள அதே கதை தான் சங்கமம் படத்திலும் இடம் பெற்றது. கிராமத்து தமிழ் நாட்டுப்புற இசை, நடனத்திற்கும், கர்நாடக இசை, பரதத்திற்கும் இடையேயான கலை ரீதியாக மோதலும், கலைஞர்களிடையேயான காதலும் என நகரும் கதையில் இறுதியில் எது வென்றது என்பதே முடிவாக இருந்தது.
ரகுமான் இப்படத்தின் ஹீரோ என சொல்லப்பட்டாலும், உண்மையில் ஹீரோ மணிவண்ணன் தான். அப்படிப்பட்ட ஒரு தேர்ந்தெடுத்த நடிப்பை இந்த படத்தில் வழங்கியிருந்தார். இதேபோல் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். அதேபோல் ரஹ்மான் இசையில் மார்கழி திங்கள், மழைத்துளி மண்ணில் சங்கமம், வராக நதிக்கரையோரம், முதன்முதல் கிள்ளி பார்த்தேன், சௌக்கியமா கண்ணே என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
கூடுதல் தகவல்கள்
இன்றைக்கும் பள்ளி, கல்லூரி விழாவில் மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடல் ஒலிக்காத மேடைகளே இருக்க முடியாது. அதேபோல் பரதநாட்டியத்துக்கு 'மார்கழி திங்கள்' பாடல் இடம் பெறும். மேலும் இரண்டு கலைகள் பற்றிய இந்த படத்துக்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஹ்மானை அணுகியுள்ளார். அப்போது, “கர்நாடக சங்கீதத்துல கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், நாட்டுப்புற இசையில இளையராஜா” என இவர்களை அடிச்சிக்க முடியாது. ஒரே படத்தில் 2 கலையும் தொட வேண்டும் என்றால் இன்னும் பெட்டராக பண்ண வேண்டும் என சொல்லி சிறப்பான இசையை கொடுத்தார்.
இந்த படம் தியேட்டரில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே சன் டிவியில் ஒளிபரப்பு செய்தது அந்த காலக்கட்டத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த படத்தின் வசூல் குறைந்தது.
இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் விருதையும் வைரமுத்து 2000 ஆம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருதாகும். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருது கிடைத்தது. மார்கழி திங்கள் பாடலுக்கு எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார் என ஏகப்பட்ட சிறப்புகளைக் கொண்டது சங்கமம் படம்.