Good Bad Ugly: ரெடியா மாமே! மீண்டும் நெட்ஃப்ளிக்ஸில் அஜித்தின் குட் பேட் அக்லி!
நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி படம் மீண்டும் நெட்ஃப்ளிக்ஸில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
நீக்கப்பட்ட குட் பேட் அக்லி:
ஓடிடி தளத்தைப் பொறுத்தமட்டில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் பின்னணி இசையில் இளையராஜா இசையில் உருவான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். மேலும், அர்ஜுன்தாஸ் அறிமுக காட்சியில் ஒத்த ரூபாயும் தர்றேன் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். மேலும், அர்ஜுன்தாஸ் போதைக்காட்சியில் என் ஜோடி மஞ்சக்குருவி என்ற பாடலும் இடம்பெற்றிருக்கும். இந்த 3 பாடல்களும் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும்.
இந்த 3 பாடல்களும் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் ஆகும். இளையராஜா தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸில் மீண்டும்:
#GoodBadUgly is Back in Netflix🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 20, 2025
• Ilamai Idhoo — Puli Puli Song
• Otha Rupai Tharen — GBU BGM
Retro Songs Being Replaced Perfectly!
pic.twitter.com/zQyN8UfXy3
ஆனாலும், குட் பேட் அக்லி படத்தில் இந்த பாடல்கள் இடம்பெற்றதற்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இளையராஜாவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் குட் பேட் அக்லி படத்தில் அவரது பாடல்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, நெட்ஃப்ளிக்ஸில் இருந்து குட் பேட் அக்லி படம் நீக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்றிருந்த பாடல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக படத்தில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடலே சேர்க்கப்பட்டுள்ளது. இளமை இதோ பாடலுக்கு பதிலாக புலி புலி பாடல் இடம்பிடித்துள்ளது. ஒத்த ரூபாய் தர்றேன் பாடலுக்கு பதிலாக குட்பேட் அக்லி படத்தின் பிஜிஎம் இடம்பிடித்துள்ளது. என் ஜாேடி மஞ்சக்குருவி பாடலும் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீண்டும் குட் பேட் அக்லி படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தந்தை - மகன் சென்டிமென்டை மையமாக வைத்து நகரும் கதை என்றாலும், அஜித்தின் கடந்த கால வெற்றிப் படங்களான வாலி, தீனா, பில்லா, மங்காத்தா, வரலாறு போன்ற பல படங்களின் ரெஃபரென்ஸ்கள் நிறைந்து படத்தை அஜித் ரசிகர்களுக்காகவே எடுத்திருப்பார். இதனால், இந்த படம் அஜித் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டு, வெற்றி பெற்றது.
இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன்தாஸ், பிரசன்னா, சுனில் என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் வந்திருப்பார்.




















