Aditi - Siddharth : ஒரு காதலி கிடைக்க எனக்கு 23 வருஷமாச்சு.. சித்தார்த் சொன்ன லவ் ஸ்டோரி
தனது திருமண தேதி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் சித்தார்த்.. சமீபமாக அதிதி - சித்தார்த் இருவருக்கும் நிச்சயமானது
நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் திருமண நிச்சயம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த் தற்போது தனது திருமண தேதி பற்றி பேசியுள்ளார்.
சித்தார்த்
பாய்ஸ் படத்தில் 'எனக்கொரு கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா' என்று சித்தார்த் பாட்டுப்பாடி 23 ஆண்டுகள் கடந்துள்ளன. அவரது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோ வெளியிடுவது, திரைத்துறையினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டார்கள்.
ஆனால் இது தொடர்பாக இருவரும் எந்த விளக்கமும் அளிக்காததால் இந்த தகவல்கள் வதந்திகளாகவே நின்றன.
சித்தார்த் அதிதி நிச்சயம்
இப்படியான நிலைதான் கடந்த மார்ச் 28-ஆம் தேதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் திருமண நிச்சயம் செய்துகொண்ட தகவலை வெளியிட்டது இந்த ஜோடி. தான் அதிதியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் சித்தார்த் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தென் இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சித்தார்த்தின் 23 வருட ஆசை
திருமண நிச்சயத்திற்கு பிறகு முதல் முறையாக தனது காதல் வாழ்க்கைப் பற்றியும் திருமணம் பற்றியும் பேசியுள்ளார் நடிகர் சித்தார்த். சமீபத்தில் தனியாக யூடியுப் நிறுவனம் ஒருங்கிணைத்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார் சித்தார்த். இந்த நிகழ்வில் அவருக்கு சித்தா படத்திற்காக சிறந்த என்டர்டெயினருக்கான விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய சித்தார்த் இப்படி கூறினார்.
"பாய்ஸ் படத்துல எனக்கு ஒரு கேர்ள்ஃப்ரண்ட் வேணும்னு கேட்டு 23 வருஷமாச்சு. இத்தனை வருஷம் கழிச்சு கேட்கவேண்டிய ஆளுக்கு அது கேட்டுடுச்சு. சேர்த்து வச்சிட்டாங்க. நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க என்ன ரகசியமா நிச்சயம் பண்ணிட்டீங்க அப்டின்னு, ஒரு விஷயத்தை பிரைவேட்டா பண்ணுறதுக்கும் சீக்ரெட்டா பண்றத்துக்கும் வித்தியாசம் இருக்கு. என்னுடைய நிச்சயம் என் நெருங்கிய உறவினர்களுடன் பிரைவேட்டா நடந்தது."
திருமணம் எப்போது ?
திருமண தேதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது சித்தார்த் இப்படி கூறினார். "உடனே தேதியை முடிவு செய்ய இது ஒன்னும் படத்தோட டேட் கிடையாது. பெரியவங்க பாத்து பேசி முடிவு பண்ணட்டும்” என்றார்