17 years of Jithan : படம் என்னமோ சூப்பர் ஹிட்.. ஆனால் ஹீரோவுக்குதான் சான்ஸ் கிடைக்கல... 17 ஆண்டுகளை கடந்த 'ஜித்தன்'..!
சூப்பர் நேச்சுரல் ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் வெளியான 'ஜித்தன்' திரைப்படம் இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல ஹீரோக்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் வாய்ப்புகளை கொடுத்தது சூப்பர் குட் பிலிம்ஸ். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மிக பெரிய வெற்றி படங்காகவே அமைந்துள்ளன. ஜனரஞ்சகமான படங்களை எடுப்பதில் மக்களின் நம்பிக்கையை சம்பாதித்த நிறுவனம்.
இப்படி பல முன்னணி நடிகர்களை கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர் பி சவுத்ரி தனது மகன் ரமேஷை அறிமுகப்படுத்திய திரைப்படம் 'ஜித்தன்'. 2005ம் ஆண்டு சூப்பர் நேச்சுரல் ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம் இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பாலிவுட்டில் 2004ம் ஆண்டு வெளியான 'கயாப்' படத்தின் ரீ மேக் திரைப்படம் தான் ஜித்தன். பூஜா, கலாபவன் மணி, எஸ்.வி, சேகர், லிவிங்ஸ்டன், நளினி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்ததனால் ரமேஷ் பெயருடன் அடைமொழியாக சேர்ந்து ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார்.
சிறுவயது முதலே தனது கிளாஸ் மேட் பிரியாவை ஒரு தலையாக காதலித்து வரும் ஜித்தன் ரமேஷ் காதலியிடம் அதை வெளிப்படுத்தாமல் தனக்குள் அடக்கி வைக்கிறான். ஆனால் பிரியாவோ வேறு ஒரு கிளாஸ் மேட்டை விரும்ப விரக்த்தியில் மனம் உடைந்து போன ரமேஷ் யார் கண்ணுக்கும் தெரியாத படி மறைகிறார். உருவம் தெரியவில்லை என்றாலும் அவரின் குரல் மட்டும் மற்றவர்களுக்கு கேட்கும். இதை சாதகமாக பயன்படுத்தி பிரியாவை தொந்தரவு செய்யாமல் அவளுடனே இருந்தான். பிரியாவிற்கு பரிசளிக்க வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்து ஊடகங்களின் கவனத்தை பெறுகிறான்.
பிரியாவின் உதவியோடு ரமேஷை பிடிக்க தமிழக அரசு முடிவெடுத்து பிளான் போடுகிறது. அந்த சமயத்தில் ரமேஷ் தன்னை பற்றின உண்மைகளை பிரியாவிடம் சொல்லி புரியவைக்கிறான். ரமேஷின் உண்மையான காதலை உணர்ந்த பிரியா அவனை போலீசிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தப்பித்து ஓட சொல்கிறாள். எதிர்பாராத விதமாக அப்போது மழை பொழிய, ரமேஷ் மீது விழும் மழைத்துளியை வைத்து போலீஸ் அதிகாரியான கலாபவன் மணி ரமேஷை சுட்டு வீழ்த்துகிறார். ரமேஷ் அந்த இடத்திலேயே இறந்தாலும் அவன் இறப்புக்கு முன்னர் பிரியா மீது இருந்த காதலை வெளிப்படுத்தி விடுகிறான்.
இந்த வித்தியாசமான திரில்லர் கலந்த காதல் கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஜித்தன் ரமேஷுக்கு ஏனோ பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு ஹாரர் கலந்த காமெடி ஜானரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.