அடகு கடை சுவரை துளையிட்டு 26 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் அபேஸ் - வடமாநிலத்தவர் கை வரிசையா?
வந்தவாசி அடுத்த உள்ள அடகு கடையில் சுவற்றில் துளை இட்டு 65 சவரன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி நகைகள், 3லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (60). இவர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்பு உள்ள வணிக வளாகத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அடகு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கடையை திறப்பதற்கு வந்தபோது கடை முன்பு இருந்த கேமராக்கள் உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டாமல் இருந்தால் நிம்மதியுடன் கடையை திறந்தார். அப்போது கடையின் சுவற்றில் துளை இட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பெட்டகத்தை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த 65 சவரன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி நகைகள், 3 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, ஆய்வாளர் சோனியா, குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் தணிக்கை வேல் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அடகு கடையில் பக்கத்தில் உள்ள இருசக்கர பழுதுபார்க்கும் கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு கடையில் உள்ளே இருந்த பீரோவில் வெல்டிங் வைத்துள்ளனர் அப்போது உடைக்க முடியாததால் லாக்கரை உடைத்து அதில் இருந்த நகை பணம் உள்ளவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் திருட்டு நடந்த அடகு கடை மற்றும் இருசக்கர பழுதுபார்க்கும் கடையில் தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது மோப்பநாய் வந்தவாசி சாலையில் ஓடியது அங்கிருந்த வெல்டிங் கடையில் மோப்பம் பிடித்து நின்றது. அந்தக் வெல்டிங்கடையும் உடைத்து அதிலிருந்த பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு இரும்பு ஆயுதங்கள் உடன் வருவது பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த திருட்டு சம்பவத்தில் வெளி மாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால் காவல்துறையினர் அனைத்து சோதனை சாவடிகளில் உள்ள அனைத்து கேமராக்களையும் சோதனையிட உள்ளதாகவும் மேலும் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை துவங்கி உள்ளதாகவும் கூடிய விரைவில் குற்றவாளியை கையும் களவுமாக கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தெரிவித்தார். அடகு கடையில் நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.