மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்; பாட்டி மீது தீ வைத்த கணவன் - நடந்தது என்ன?
சீர்காழி அருகே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் கணவர், மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மனைவியின் பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எதிர் எதிர் வீடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிங்கார் என்பவரது மனைவி 80 வயதானவர் ரவணம். இவரது மகள் வழி பேத்தியான புனிதா என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் காத்தான் என்பவரது மகன் 38 வயதான காமராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மனைவியை வீட்டிற்கு அழைத்த கணவர்
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக புனிதா தனது கணவர் காமராஜுவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் தொடர்ந்து பலமுறை புனிதாவை வீட்டிற்கு அழைத்தும் வராததால், ஆத்திரமடைந்த காமராஜ் நேற்று மாலை வீட்டிலிருந்த புனிதாவின் தாயார் நாகவல்லி, பாட்டி ரவணம் ஆகியோரிடம் புனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காமராஜ் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்திருந்த மூதாட்டி ரவணம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மூதாட்டியின் தலை மற்றும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
காவல்துறையினர் விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறனர். இச்சம்பவம் குறித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் காமராஜர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் படுத்திருந்த மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் பொறுப்பேற்றார் மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

