Budget 2024: இறக்குமதி வரியை குறைத்தும் எட்டாக்கனியாகவே இருக்கும் தங்கம்! சாமானியர்கள் வேதனை!
மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டும் தங்கம் விலை 50 ஆயிரத்தை கடந்தே விற்பனையாவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம். நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவுடன் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள மோடி அரசு இன்று நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
தங்கம் மீதான இறக்குமதி வரி குறைவு:
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக, தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், தங்கத்தை மிக அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதன்மையானது ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் தங்கம் என்பது வெறும் ஆபரண மற்றும் ஆடம்பர பொருளாக மட்டுமின்றி, அது மக்களின் சேமிப்பாக கருதப்படுகிறது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் தங்கத்தை தங்கள் நெருக்கடியான காலத்திற்கு பயன்படும் அவசிய சேமிப்பாக கருதுகின்றனர். இந்த சூழலில், சமீபகாலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
சவரனுக்கு ரூ.2 ஆயிரம் சரிவு:
குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்தை நெருங்கும் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தங்கத்தின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்று மக்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த சூழலில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்தது. சவரன் தற்போது 52 ஆயிரம் விற்பனையாகி வருகிறது.
எட்டாக்கனி:
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 2 ஆயிரம் குறைந்தாலும், இன்னும் தங்கம் விலையானது எட்டாக்கனியாகவே சாமானிய மக்கள் மத்தியில் இருக்கிறது. தங்கத்தின் விலை 2 ஆயிரம் குறைந்திருப்பது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், 50 ஆயிரத்தை கடந்தே தங்கம் தற்போது வரை விற்பனையாகி வருவது மக்களுக்கு இன்னும் அதிர்ச்சியிலேதான் வைத்துள்ளது.
வெள்ளி விலையும் குறைவு:
வெள்ளிக்கும் 6 சதவீதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், வெள்ளி விலை கிலோ ரூபாய் 3 ஆயிரத்து 100 வரை குறைந்துள்ளது. இந்தாண்டு இறுதியில் நான்கு மாநில சட்டசபைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிட்டாதது இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு நடுத்தர மக்களின் பொருளாதார அத்தியாவசியங்களில் ஒன்றான தங்கத்தை தூண்டிலாக பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுக்க மத்திய அரசின் இந்த பட்ஜெட் மூலமாக வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் வல்லுவனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.