அமைச்சர் பொன்முடி vs செஞ்சி மஸ்தான்; வீதிக்கு வந்த கோஷ்டி மோதல்... அப்செட்டில் பொன்முடி
அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடி கட்ட வேண்டாம் என திமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தடுத்ததாக கூறி திமுக நிர்வாகி வாக்குவாதம்.

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: தண்ணீரை திறக்க வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடி கட்ட வேண்டாம் என திமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தடுத்ததாக கூறி திமுக நிர்வாகி வாக்குவாதம் செய்ததால் தண்ணீர் திறப்பு விழாவில் வீதிக்கு வந்த திமுக கோஷ்டி மோதலால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அமைந்துள்ள வீடூர் அணையில் இருந்து இன்று (3ஆம் தேதி) முதல் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு 328 மில்லியன் கன அடி தண்ணீர் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3,200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்க இருக்கிறது.
இந்நிலையில் வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.
விழா முடிந்து திமுக அமைச்சர் பொன்முடி புறப்பட்டு செல்லும் நேரத்தில் மயிலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், திமுக நிர்வாகியுமான மலர் மன்னன், அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுகவினர் யாரும் திமுக கொடி கட்ட கூடாது எனக் கூறி திமுக மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் தடுத்து விட்டதாக கூறி கூச்சலிட்டார்.
நடுரோட்டில் திமுக அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுக நிர்வாகி மலர் மன்னன், திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தானை பொது வெளியில் திட்டி தீர்த்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அமைச்சர் பொன்முடிக்கும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கும் இடையே இலைமறை, காய்மறையாக நீடித்து வந்த கோஷ்டி மோதல் இன்று தண்ணீர் திறப்பு விழாவில் வீதிக்கு வந்துள்ளது.
முன்னதாக வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைப்பது குறித்து தனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி பொதுப்பணித் துறை அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடிந்துக் கொண்டார்.

